"2024 தேர்தலில் இதன் முடிவு எதிரொலிக்கும்" ஆசிரியர்கள் எச்சரிக்கை!

Published on
Updated on
1 min read

அரசுக்கு எதிராக நடைபெற்று வந்த போராட்டத்தை தற்காலிகமாக  வாபஸ் பெறுவதாக ஆசிரியர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். அதே நேரத்தில் கோரிக்கைகள் நிறைவேற்றப் படவில்லை எனில் தேர்தலில் இதன் முடிவு எதிரொலிக்கும் என்றும் அவர்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.

சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள், பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கடந்த 8 நாட்களாக சென்னை டிபிஐ வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 

இதனையடுத்து, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆசிரியர் சங்க பிரதிநிகளுடன் புதன்கிழமை பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனால், அமைச்சரின் பேச்சுவார்த்தையில் திருப்தி இல்லை எனக்கூறி ஆசிரியர்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர். இதனையடுத்து, தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் வியாழக்கிழமை கைது செய்து சமுதாய கூடங்களில் அடைந்தனர். 

பகுதிநேர ஆசிரியர்கள் மற்றும் டெட் ஆசிரியர்கள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.  போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு, இந்த முடிவை எடுத்துள்ளதாக டெட் ஆசிரியர் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் தெரிவித்துள்ளார். எனினும், தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப் படவில்லை எனில், நாடாளுமன்றத் தேர்தல் முடிவில் இதனுடைய பலன் எதிரொலிக்கும் என உறுதிபடத் தெரிவித்தார்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு கைதான இடைநிலை ஆசிரியர்கள் 7 மணி நேரத்திற்கு பிறகு விடுவிக்கப்பட்டனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com