
இராமநாதபுரத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் முதலமைச்சரை சந்திக்க வந்த நரிக்குறவ மக்களை காவலர்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் 2 நாள் சுற்றுப் பயணமாக சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதைத்தொடர்ந்து விருந்தினர் மாளிகையில் நலத்திட்ட உதவிகள் மற்றும் சிறப்பாக பணிபுரிந்த அரசு பணியாளர்கள், சமூக சேவகர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை முதலமைச்சர் வழங்கினார்.
இந்நிலையில் ஆர்எஸ்.மங்கலம் பகுதியை சேர்ந்த நரிக்குறவர்கள் தங்களுக்கு அரசு கட்டி கொடுத்த வீடுகள் அனைத்தும் இடிந்து விட்டது, தற்போது தெருவில் வாழ்கிறோம் எனக்கூறி முதலமைச்சரை சந்திக்க முயன்றனர். அப்போது அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.