சின்ன வெங்காயம் மொத்த விற்பனையில் கிலோ 200 ரூபாய்க்கும் சில்லறை விற்பனையில் கிலோ 230 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக தொடர்ந்து வரத்து குறைவு காரணமாக சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை ₹100-க்கு மேல் நீடித்து விற்பனை செய்யபட்டு வருகிறது. தக்காளிக்கு இணையாக சின்ன வெங்காயத்தின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக சின்ன வெங்காயத்தின் விலை உச்சத்தை தொட்டுள்ளது.
குறிப்பாக இன்று ஒரே நாளில் மட்டும் 30 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. நேற்று மொத்த விற்பனைக்கு 170 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சின்ன வெங்காயம் இன்று முதல்முறையாக 200 ரூபாயை தொட்டுள்ளது. சில்லறை விற்பனையை பொருத்தவரை நேற்று 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 220 முதல் 230 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு மாதத்திற்கு முன்பு 40 முதல் 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ சின்ன வெங்காயம் ஒரு மாத காலமாக படிப்படியாக விலை உயர்ந்து இன்று ஒரு கிலோ 220 முதல் 230 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சின்ன வெங்காயத்தின் வரத்து தொடர்ந்து குறைந்து வருவதால் மேலும் விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தகவல்.
மைசூரில் இருந்து மட்டுமே தற்போது சின்ன வெங்காயம் வரத்து இருப்பதாகவும் இன்று இரண்டு வண்டிகள் மட்டுமே வந்திருப்பதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கிறார்கள்.