சென்னை ஐஸ் அவுஸில் வீட்டின் பால்கனியில் விளையாடிக் கொண்டிருந்த நான்கு வயது குழந்தை தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 8 மணி நேரமாக குழந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்காத காரணத்தினால் தான் குழந்தை உயிரிழந்ததாக பெற்றோர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர். சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் உள்ள பள்ளப்பன் தெருவில் வசித்து வருபவர் செந்தமிழ். இவர் டீக்கடை ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி லட்சுமி இந்த தம்பதியினருக்கு நிதிஷ், நிதேஷ், என இரட்டைக் குழந்தைகள் இருக்கின்றனர்.
நேற்று மாலை குழந்தைகள் முதல் மாடியில் உள்ள பால்கனி அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது நித்திஷ் பால்கனியின் கம்பி மீது ஏறி உள்ளான் இதில் நிலை தடுமாறி சாலையில் விழுந்த நிதிஷ் தலையில் படுகாயம் அடைந்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு குழந்தை நித்திஷுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இன்று அதிகாலை குழந்தை இறந்து விட்டதாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சார்பில் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மருத்துவமனையில் குழந்தைக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை எனவும், எட்டு மணி நேரமாக அரசு மருத்துவமனையில் மருத்துவ மாணவர்கள் மட்டுமே சிகிச்சை அளித்து வந்ததாகவும் மருத்துவர்கள் எவரும் சிகிச்சை அளிக்க வரவில்லை எனவும் அக்குழந்தையின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். மேலும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தகாத வார்த்தையால் பேசியதாகவும் குழந்தையின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து, இன்று அதிகாலை குழந்தை இறந்ததாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் அலட்சியமாக கூறியுள்ளதாகவும் குழந்தையின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ஐஸ் ஹவுஸ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த நித்தீஷின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. மாடியில் தவறி விழுந்து 4 வயது ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிக்க:வேங்கை வயல் விவகாரம்; 4 சிறுவர்களுக்கு டிஎன்ஏ சோதனை!