நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே அரசு பேருந்து நிறுத்த மறுத்ததால் ரோட்டின் குறுக்கே பைக்கை நிறுத்தி மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாங்குநேரி அடுத்துள்ள தெற்கு பாப்பாங்குளத்தை சேர்ந்தவர் கணேசராஜா(65) ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவர் நெல்லைக்கு செல்வதற்காக பரப்பாடி பேருந்து நிலையத்தில் பஸ்ஸுக்காக காத்து நின்றார் . அப்போது திசையன்விளையில் இருந்து பயணிகளை ஏற்றுக்கொண்டு அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்து நெல்லைக்கு சென்று கொண்டிருந்தது.
அதனை நிறுத்த கோரிய போது அந்த பேருந்து அங்கு நிற்காமல் சென்று விட்டது. இதனால் பைக்கில் பின் தொடர்ந்து வந்த கணேசராஜா நாங்குநேரி ரயில்வே கேட்டில் நின்ற அந்த பேருந்தின் ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வழக்கமாக நிற்க வேண்டிய நிறுத்தத்தில் ஏன் நிற்காமல் வந்தீர்கள்? எனக் கூறி நடத்துனர் மற்றும் ஓட்டுநரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது அதே பேருந்தில் வந்த பயணிகள் சிலர் ஓட்டுநர் மற்றும் நடத்தனருக்கு ஆதரவாக பேசி கணேசராஜாவை தாக்க முயன்றனர். இதனால் ஆத்திரமடைந்த கணேசராஜா தனக்கு நியாயம் வேண்டும் என கோரி தனது பைக் ரோட்டின் குறுக்கே நிறுத்தி மறியலில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக அங்கிருந்த பொதுமக்கள் சிலரும் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரயில் வரும் நேரத்தில் போராட்டத்தின் காரணமாக போக்குவரத்து தடைபட்டு ரயில்வே கேட்டில் வரிசை கட்டி நின்ற வாகனங்களால் கேட்டை மூட முடியாமல் ரயில்வே ஊழியர் அவதிப்பட்டார். இதனால் ரயில் போக்குவரத்தில் ரயில்வே சிக்கல் ஏற்படும் சூழ்நிலை உருவானது .
இதனை அடுத்து அங்கு வந்த நாங்குநேரி டிஎஸ்பி ராஜு மற்றும் போலீசார் அரசு பஸ் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது சட்ட விரோதமாக செயல்படும் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு ஆதரவாக போலீஸ் டிஎஸ்பி பேசியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் உரிய நிறுத்தம் இருந்தும் ஓட்டுனர் அரசு பேருந்தை நிறுத்தாமல் வந்ததும் தெரிய வந்தது. இதனை அடுத்து போலீசார் அந்த பேருந்து ஓட்டுனரை எச்சரித்தார். மேலும் உரிய நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியின் பேரில் கணேசன் ராஜாவை அதே பஸ்ஸில் நெல்லைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிக்க | 2024 இல் தமிழ்நாட்டில் உலகத் தமிழ் மாநாடு ?
நாங்குநேரி தாலுகாவில் விதிமுறைகளை கடைபிடிக்காமல் செயல்படும் அரசு பேருந்துகளால் அடிக்கடி பயணிகளுக்கும் ஓட்டுநர் நடத்துனர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன.
நெல்லை மண்டலத்தில் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளின் தவறான செயல்பாடுகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதுடன் அடிக்கடி சட்ட ஒழுங்கு பிரச்சனைகளும் ஏற்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.