மணிப்பூர் கலவரத்தில் பெண்மையை இழிவு படுத்தியவர்கள் மீது எடுக்கப்பட போகும் நடவடிக்கையை தான் நாடும் உலகமும் எதிர்நோக்கி காத்திருக்கிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
அண்மையில், மணிப்பூர் கலவரத்தில் கடந்த மே 4 ஆம் தேதி பெண்களை நிர்வணமாக்கி கூட்டு பாலியல் செய்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஆனால், இந்த வீடியோ குறித்து பாஜக தரப்பில் சரியான அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. தொடர்ந்து, கடந்த 20 ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இரண்டு அவையிலும் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் அறிக்கை அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி எதிர்க்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள காமராஜர் அரங்கில் கக்கன் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டக் காட்சிகள் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நாடு மோசமான நிலையில் உள்ளது எளியவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. துரியோதனன் ஆட்சியில் கூட பாஞ்சாலியின் துயில் உரிய முயற்சி செய்தார்கள்.
ஆனால் மோடி ஆட்சியில் ஏழு பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக இழுத்து செல்லப்பட்டுள்ளனர். இந்த ஆட்சி எடுத்த நடவடிக்கை என்ன? உடனடியாக கிடைத்த நீதி என்ன? உடனடியாக கிடைத்த தீர்வு என்ன?
அரசாங்கம் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறது. இதுவரை பிரதமர் பதில் சொல்ல மறுக்கிறார். நாடாளுமன்றத்திலும் பதில் சொல்ல மறுக்கிறார், வெளியிலும் பதில் சொல்ல மறுக்கிறார். இதற்கு கூட பதில் சொல்லாத பிரதமர் எதற்கு பதில் சொல்லுவார் ? என்று தொடர் கேள்விகளை எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், காமுகர்கள் செய்த வெறிச்செயல்களை பார்த்து இருக்கிறோம். ஆனால் இனவெறியில் அவமானப்படுத்த வேண்டும் என்று பெண்மையை இழிவு படுத்தி கேவலப்படுத்தி உள்ள செயலை தற்போது தான் பார்க்கிறோம். இதற்கு கடுமையான தாக்குதல் வேண்டாமா? அரசிடமிருந்து மிக கடுமையான பதில் வேண்டாமா? இதைத்தான் நாடும் உலகமும் இன்று எதிர்நோக்கி காத்திருக்கிறது. எனவே, பிரதமர் மோடி இதற்கு நிச்சயம் பதில் சொல்ல வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி காட்டமாக தெரிவித்துள்ளார்.