பட்டியல் இனத்திலிருந்து கிறிஸ்தவ மற்றும் முஸ்லீம் சமயத்திற்கு மாறியவர்கள் அனைவரும் தற்போது வரை பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குள்ளேயே வைக்கப்பட்டுள்ளனர். பட்டியல் இனத்தில் சேர்க்க வேண்டி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
தீண்டாமை போன்ற இழிவுகளிலிருந்து தற்காத்து கொள்ள பட்டியல் இனத்தை சேர்ந்த பலர் கிறிஸ்தவ மற்றும் முஸ்லீம் சமயங்களுக்கு மாறினர். அவர்கள் அனைவரும் தற்போது வரை பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குள்ளேயே இட ஒதுக்கீடு பெற்று வருகின்றனர்.
தற்போது அவர்கள் சார்பில் பட்டியல் இனத்தில் அவர்களையும் சேர்க்க வேண்டும் எனவும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தங்களுக்கும் இடஒதுக்கீடு வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் மத்திய அரசிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
உச்சநீதிமன்றத்திற்கு பதிலளித்த மத்திய அரசு தற்போது இந்து, சீக்கியர் மற்றும் புத்த சமயத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே பட்டியல் இனத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனவும் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் அவர்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது எனவும் விளக்கம் அளித்துள்ளது.
மேலும் இந்த இட ஒதுக்கீடு என்பது 1951ம் ஆண்டு தரவுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பட்டியல் இனத்தவர்கள் ஆணை அடிப்படையில் உருவாக்கப்பட்டது எனத் தெரிவித்துள்ளது மத்திய அரசு.
அதனைத் தொடர்ந்து, பட்டியல் இனத்தில் இருந்து கிறிஸ்தவம் மற்றும் முஸ்லீம் சமயத்திற்கு மாறியவர்கள் சமூகத்தில் எந்த ஒடுக்கு முறைக்கும் உட்படுத்தப்படாததால் அவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து கடந்த காலங்களில் தீண்டாமையிலிருந்து விடுபடவே அவர்கள் கிறிஸ்தவ மற்றும் முஸ்லீம் சமயத்திற்கு மாறியுள்ளனர்.
அவர்கள் சமூகத்தில் ஏதேனும் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனரா என்பதை ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி பாலகிருஷ்ணா தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது எனவும் அவர்கள் அறிக்கை அடிப்படையில் முடிவெடுக்கப்படும் எனவும் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது.