1982ல் பிறந்த பெண்ணின் வயது 123.... எவ்வாறு?!!

1982ல் பிறந்த பெண்ணின் வயது 123.... எவ்வாறு?!!
Published on
Updated on
1 min read

இந்தியாவில் தற்போதைய நிலைமையைப் பொறுத்தவரை ஆதார் கார்டு இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது.  ஆதார்கார்டு அறிமுகமான காலகட்டத்தில் தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ளலாம் என கூறப்பட்ட நிலையில் தற்போது அனைவரின் விவரங்களும் ஆதார் கார்டுக்குள் வந்துவிட்டது.

ஒரு மனிதனின் அன்றாட வாழ்க்கையில் அனைத்து நிலைகளிலும் தேவைப்படும் இந்த ஆதார்கார்டு பல்வேறு குளறுபடிகளையும் கொண்டுள்ளது.

அந்த வகையில் ஆதார்கார்டு வாங்கிய நாள் முதல் தற்போது வரை அரசு அலுவலகங்களை நோக்கி சென்று அவதியுறும் பெண் கவிதா.  இவர் திருச்சி மாவட்டம் தாயனூர் தெற்குத் தெருவில்  1982-ம் ஆண்டு பிறந்துள்ளார். 

ஆனால் கவிதாவினுடைய ஆதார் கார்டை அச்சிடும்போது பிறந்த வருடம் 1982-க்கு பதிலாக 1900 என பதிவாகி விட்டது.  சுமார் 82 வருடங்களுக்கு முன் பிறந்தவர் என்ற ரீதியில் அளிக்கப்பட்ட இந்த ஆதார்கார்டின்படி தற்போது கவிதாவுக்கு 123 வயதாகிறது. 

இதைடுத்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் முறையிட்ட இவர், தன் வயதை மாற்றுமாறு பல நாட்களாக, பல மாதங்களாக அலைந்து வருகிறார். மேலும் தனக்கு 123 வயது என்பதை கேள்விப்பட்ட பலரும், தன் வீட்டுக்கே வந்து ஆதார் கார்டை பார்த்து சிரித்து விட்டு செல்கின்றனர் என குமுறுகிறார் கவிதா. 

இதுவே, சாமானியன் ஒருவன் ஆதார்கார்டு ஆதாரங்களை வைத்து வயதை குறைத்து ஏதேனும் ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபட்டிருந்தாலும், சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு  1 கோடி ரூபாய் வரை அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கும்.  ஆனால் அரசு அதிகாரிகள் செய்யும் தவறுகளை தண்டிப்பது இயலாத ஒன்றாக இருப்பதால் தவறுகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com