
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது.
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை என தமிழ்நாடு அரசியலில் பரபரப்பு நிலவும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை செயல்படுத்துவது, புதிய தொழில்கள், தொழில் விரிவாக்கத்திற்கு அமைச்சரவையில் அனுமதி வழங்க வாய்ப்பு, ஆளுநர் செயல்பாடு, அமலாக்கத்துறை சோதனை தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு முக்கியத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அமலாக்கத்துறை நடவடிக்கையை கண்டித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
முதியோர் உதவித் தொகையை ஆயிரம் ரூபாயில் இருந்து, ஆயிரத்து 200 ரூபாயாக உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் அமைச்சர்கள், தலைமை செயலாளர் உள்ளிட்ட துறை ரீதியான அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.