உலகின் 5-வது பொருளாதார நாடாக இந்தியா மாறியுள்ளதாக பிரதமர் மோடி தமது மனதின் குரல் உரையில் தெரிவித்தார்.
உலகின் 5-வது பொருளாதார நாடாக மாறிய இந்தியா:
நாட்டு மக்களிடையே பிரதமர் நரேந்திர மோடி தமது மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் மாதம்தோறும் உரையாற்றி வருகிறார். அதன்படி, இந்த ஆண்டின் இறுதியானதும், 96-வதும் ஆன மனதின் குரல் நிகழ்ச்சியில் இன்று உரையாற்றினார். அப்போது, அற்புதமாக இருந்த 2022 ஆம் ஆண்டில் உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறியுள்ளதாக கூறினார். மேலும், உலகின் பல நாடுகளில் கொரோனா அதிகரித்து வருவதால் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்றும், முகக்கவசம் அணிந்து, கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
கடந்த சில ஆண்டுகளாக சுகாதாரத் துறையில் பல்வேறு சவால்களை நாம் சமாளித்து வருவதாக தெரிவித்த அவர், பெரியம்மை, போலியோ நோய்கள் இந்தியாவில் இருந்து முற்றிலும் ஒழிந்ததுபோல் மற்ற நோய்களையும் ஒழிக்க மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறினார். மேலும், உருமாறிய கொரோனாவின் அச்சறுத்தலுக்கு மத்தியில், மருத்துவ ஆராய்ச்சிக்கான புதிய முயற்சிகளை இந்தியா மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து, கங்கை போன்ற நாட்டின் முக்கிய நதிகளைத் தூய்மையாக வைத்திருப்பது மக்களின் தலையாய பொறுப்பு என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.