பாதாள வழி மின்சாரம்: மதிப்பீட்டு அறிக்கையை சமர்ப்பிக்க மின்வாரியம் உத்தரவு!

பாதாள வழி மின்சாரம்: மதிப்பீட்டு அறிக்கையை சமர்ப்பிக்க மின்வாரியம் உத்தரவு!
Published on
Updated on
1 min read

தேரோடும் ரத வீதிகளில், பாதாள வழி மின்சாரம் வினியோகிப்பதற்கான மதிப்பீட்டு அறிக்கையை சமர்ப்பிக்க பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

தஞ்சை மாவட்டம் களிமேடு கிராமத்தில், கடந்த 2022 ஏப்ரலில் நடந்த தேர் திருவிழாவில் தேரின் மேல் பகுதியில் மின்கம்பி உரசியதால் ஏற்பட்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து, மாநிலம் முழுவதும் முக்கிய கோவில்களில் தேர் செல்லும் பாதைகளில், மின் கம்பத்திற்கு மாற்றாக தரை அடி கேபிள் வாயிலாக மின் வினியோகம் செய்ய மின் வாரியம் முடிவு செய்தது.

அதன் முதல் கட்டமாக, மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருச்செந்துார் முருகன் கோவில், திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோவில் திருவீதிகளில், தரை அடி கேபிளில் மின் வினியோகம் செய்யும் பணிகள் துவங்கியுள்ளன.

அதேபோல் திருநெல்வேலி நெல்லையப்பர், ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர், கோவை கோனியம்மன், திருப்பூர் அவிநாசி லிங்கேஸ்வரர், திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோவில், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர், கரூர் தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி, காஞ்சிபுரம் ஏகாம்பரீஸ்வரர், வரதராஜ பெருமாள், காமாட்சி அம்மன் ஆகிய கோவில்களில் உள்ள தேரோடும் ரத வீதிகளில், தரைக்கு அடியில் கேபிள் வாயிலாக, மின் விநியோகம் செய்யப்பட உள்ளது.

எனவே, ஒவ்வொரு கோவிலின் நான்கு மாட வீதிகளிலும், மின் வழித்தட துாரம் எவ்வளவு, கேபிள் எவ்வளவு துாரம் அமைக்க வேண்டும், மதிப்பீட்டு செலவு எவ்வளவு என்பன போன்ற விபரங்களை ஜூன் 7ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு, மாவட்ட மேற்பார்வை பொறியாளர்களுக்கு மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com