2 நிமிடங்களிலேயே முடங்கிய மக்களவை...பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு!

2 நிமிடங்களிலேயே முடங்கிய மக்களவை...பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு!

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்கட்சிகளின் கடும் அமளியால் நாடாளுமன்றம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.


நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் 4ம் நாள் அமர்வு இன்று தொடங்கியது. கூட்டத்திற்கு முன்னதாக மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்ற எதிர்கட்சிகள் கூட்டத்தில், மக்களவையில் நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டு வர முடிவெடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. 

தொடர்ந்து மக்களவை தொடங்கியபோது, மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்பிக்கக் கோரி எதிர்கட்சிகள் பதாகைகளுடன் அமளியில் ஈடுபட்டன. இதனால் அவை கூடிய 2 நிமிடத்திலேயே 2 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஓம்பிர்லா அறிவித்தார். அதேபோல், மாநிலங்களவையிலும் மணிப்பூர் குறித்து எதிர்கட்சிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. 

இதையும் படிக்க : குடிநீரில் கழிவுநீர் கலக்கும் அவலம்...பரிதவிக்கும் கிராம மக்கள்!

அதன்பின்னர், மீண்டும் 12 மணிக்கு மாநிலங்களவை கூடியபோது, பாஜக ஆட்சிமன்றக் கூட்டத்தில் இந்தியா எதிர்கட்சியினரை பிரதமர் விமர்சித்தது தொடர்பாக எதிர்கட்சிகள் கேள்வியெழுப்பின. மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க தயாராக இருப்பதாக பாஜக அமைச்சர்கள் வலியுறுத்தியபோதும் அமளி தொடர்ந்தது. 

பிரதமர் மோடி கிழக்கிந்தியக் கம்பெனி குறித்துப் பேசுகிறார் - தாங்கள் மணிப்பூர் குறித்துப் பேசுகிறோம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்தார். தொடர்ந்து பேசிய திமுக எம்.பி., திருச்சி சிவா, மணிப்பூர் மீது விரிவான விவாதம் நடத்த அனுமதி மறுப்பது வேதனையளிக்கிறது என கவலை தெரிவித்தார். இதையடுத்து தொடர்ந்து கூச்சல் - குழப்பம் நிலவியதால் மாநிலங்களவையும் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.