ராகுலுக்கு உயர்நீதிமன்றம் வைத்த செக் ..! ஆட்டிப்படைக்கும் அரசியல் காய்கள்...!

ராகுலுக்கு உயர்நீதிமன்றம் வைத்த செக் ..!  ஆட்டிப்படைக்கும் அரசியல் காய்கள்...!
Published on
Updated on
1 min read

2 ஆண்டுகள் சிறைத்தண்டனையை எதிர்த்த ராகுல்காந்தியின் மேல்முறையீட்டு மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் இத்தீர்ப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலையொட்டி கர்நாடகாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அனைத்து திருடர்களின் பெயரும் மோடி என்றே முடிவதாக அவர் கூறியது, மோடி சமூகத்தினரை அவமதித்ததாகக் கூறி பாஜக நிர்வாகி புர்னேஷ் தொடர்ந்த வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து  சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.

இதனை எதிர்த்தும் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரியும் ராகுல்காந்தி குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். தொடர்ந்து அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், கோடை விடுமுறைக்குப்பின் தீர்ப்பு வழங்கப்படும் என குஜராத் உயர்நீதிமன்றம் தெரிவித்தது.

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியல் ராகுல்காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் குஜராத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ராகுலின்  வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையை நிறுத்தி வைக்கவும் மறுத்து விட்டது. ராகுல்காந்திக்கு எதிராக 10 கிரிமினல் அவதூறு புகார்கள் நிலுவையில் இருப்பதால் செஷன்ஸ் நீதிமன்ற உத்தரவில் எந்தத் தலையீடும் செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். 

தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ராகுல்காந்தி மேல்முறையீடு செய்யவுள்ள நிலையில், நாடு முழுவதும் ராகுலுக்கு ஆதரவாக போராட்டங்கள் வெடித்துள்ளது.

அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜகவை எதிர்க்க ஒருங்கிணைந்துள்ள எதிர்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் முகமாக ராகுல்காந்தி பார்க்கப்பட்டு வருகிறார். இதன் காரணமாகவே 2 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே எம்.பி பதவியில் இருந்து ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

தொடர்ந்து மக்களவைத் தேர்தலில் பாஜகவை எதிர்க்க ஒன்று கூடியுள்ள எதிர்கட்சித் தலைவர்களை குறிவைத்து ரெய்டுகள் நடத்தப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால்,  லாலு பிரசாத், செந்தில்பாலாஜி வழக்கு வரை மக்களவைத் தேர்தலை குறிவைத்தே அரங்கேறுவதாகவும் அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com