ஈரோடு கிழக்கு தொகுதி பிரசாரம் ஓய்ந்தது...!

ஈரோடு கிழக்கு தொகுதி பிரசாரம் ஓய்ந்தது...!
Published on
Updated on
1 min read

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற 27-ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடுகிறார். அதிமுக வேட்பாளராக, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் உள்ளிட்ட 77 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர்.

மேலும், மொத்தவுள்ள 238 வாக்குச்சாவடி மையங்களில், 5 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டு கருவி, ஒரு வி.வி.பேட் ஆகியவை பயன்படுத்தப்படவுள்ளன. இந்நிலையில், நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது.

இதனை தொடர்ந்து நேற்று மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு முடிவடையும் வரை தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலம், தேர்தல் விவகாரத்தை தொலைக்காட்சிகளில் திரையிட தடை உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் மாலை 6 மணி முதல் 48 மணி நேரத்துக்கு கருத்துக் கணிப்பு, வாக்குப்பதிவு ஆய்வு முடிவுகள் உள்ளிட்டவற்றை மின்னணு ஊடகங்களில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் 27-ம் தேதி மாலை 7 மணி வரை, வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, தொகுதி வெளியே இருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சிப் பணியாளர்கள் ஆகியோர் மற்றும் அத்தொகுதியின் வாக்காளர்கள் அல்லாதோர் தொகுதியை விட்டு வெளியேறி வருகின்றனர். அதனை உறுதி செய்ய கல்யாண மண்டபம், சமுதாயக் கூடம், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் ஆகிய இடங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com