பிரதமர் பேசுவது புரிய வேண்டுமெனில், முதலமைச்சரும், அமைச்சர் உதயநிதியும் ஆங்கிலம், இந்தி தெரிந்தோரை அருகில் வைத்துக்கொள்ள வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பெருந்தலைவர் காமராஜரின் 121-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் மட்டுமல்லாது காமராஜர் எல்லா இடங்களிலும் கொண்டாடப்பட வேண்டியவர் என பெருமிதம் தெரிவித்தார். இந்தியாவில் காமராஜரைப் போன்று ஒரு முதலமைச்சர் இல்லை எனவும் உறுதியளித்தார்.
சக அமைச்சர்கள் எத்தனை பேர் வெளிநாடுகளில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளனர் என்பது தொடர்பான வெள்ளை அறிக்கையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும், வெளிநாடுகளில் அதிகமாக பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்கள் திமுக அமைச்சர்கள் தான் என திட்டவட்டமாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், கருப்பு பணத்தை பற்றி பேச முதலமைச்சருக்கோ, அவரது குடும்பத்திற்கோ எந்த தகுதியும் இல்லை எனவும் சாடினார். பிரதமர் பேசுவது புரிய வேண்டுமெனில், முதலமைச்சரும், அமைச்சர் உதயநிதியும் ஆங்கிலம், இந்தி தெரிந்தோரை அருகில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றார்.
திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் கர்நாடகாவில் இருந்து ஏன் நீர் வரவில்லை என்பதும், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக ஏன் தீர்மானம் இல்லை என்றும் கேள்வி எழுப்பிய அண்ணாமலை, இந்த ஆண்டு தண்ணீர் தரமாட்டோம் என்று சொன்ன பின்பும் ஏன் முதலமைச்சர் கர்நாடகா செல்கிறார் எனவும் ஆவேசமாக பேசினார்.