அதிமுக 2 முறை திருப்பி அனுப்பிய கடிதம் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் கடிதம்:
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாக்களிக்க தேர்தல் ஆணையம் வடிவமைத்த ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து விளக்கம் அளிக்க அதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்திருந்தது. அந்த அழைப்பிதழில் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பி இருந்தது.
திருப்பி அனுப்பிய அதிமுக அலுவலகம்:
தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தை அதிமுக தலைமை அலுவலக நிர்வாகிகள் பெற்றுக் கொள்ள மறுத்துள்ளனர். அதாவது, தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகளில் யாரும் இல்லை எனக்கூறி திருப்பி அனுப்பியுள்ளனர்.
விளக்கமளித்த தலைமை தேர்தல் அதிகாரி:
இதனையடுத்து, அதிமுக அலுவலகத்தில் வாங்க மறுத்து திருப்பி அனுப்பிய கடிதம் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு விளக்கம் அளித்தார். டெல்லியில் இருந்து இந்திய தேர்தல் ஆணையம் கொடுத்த ஆவணங்களின் படியே அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என பெயர் போட்டு ராயப்பேட்டை அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பியதாக விளக்கம் அளித்தார்.
மீண்டும் அனுப்பப்பட்ட கடிதம்:
இதனைத்தொடர்ந்து, தமிழக தலைமை தேர்தல் ஆணையம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்ட அந்த கடிதத்தை மீண்டும் அதிமுக அலுவலகத்திற்கு தபால் மூலம் அனுப்பியுள்ளது. இந்த முறையாவது அதிமுக அலுவலகத்தில் அந்த கடிதத்தை வாங்கி கொள்வார்களா? அல்லது மீண்டும் திருப்பி அனுப்பி விடுவார்களா? என்ற குழப்பம் அரசியல் அரங்கில் நிலவி வந்தது.
இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தகவல்:
ஆனால், தமிழக தலைமை தேர்தல் ஆணையம் இரண்டாவது முறையாக அனுப்பிய கடிதத்தையும் அதிமுக அலுவலகம் மீண்டும் வாங்க மறுத்து திருப்பி அனுப்பியுள்ளது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் 2 முறை அனுப்பிய கடிதத்தை அதிமுக திருப்பி அனுப்பியது தொடர்பாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.