அதிமுக சார்பில் சட்டமன்ற தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பிரச்சார மாநாடுகள் நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளராக உச்சநீதிமன்றம் அங்கீகரித்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் மதுரையில் இன்று எழுச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டை வரலாற்று சிறப்புமிக்க மாநாடாக மட்டுமின்றி, அரசியலில் திருப்பு முனையை ஏற்படுத்தும் மாநாடாக நடத்தி முடிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.
அதன்படி, மதுரை வலையங்குளம் ரிங் ரோடு பகுதியில் பிரமாண்ட முறையில் மாநாட்டு அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக, பல மாவட்டங்களில் இருந்தும், லட்சக்கணக்கான தொண்டர்கள் மதுரைக்கு படையெடுத்துள்ளனர். இதற்காகவே சிறப்பு ரயில், பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனிடையே, கட்சியின் பொதுச்செயலாளர், எடப்பாடி பழனிச்சாமி, மதுரைக்கு வந்து, விடுதியில் தங்கியிருந்தார்.
இதையும் படிக்க || குட் பை சீம்ஸ்; உலகையே மகிழ்வித்த சீம்ஸ் விடைபெற்றது!!
இன்று காலை 7 மணியளவில், மதுரை வலையங்குளத்தில் மாநாடு தொடங்கிய நிலையில், எடப்பாடி பழனிச்சாமி மாநாடு மைதானத்திற்கு வந்தடைந்தார். அப்பொழுது அவருக்காக காத்திருந்த தொண்டர்கள், வரவேற்றனர். அப்பொழுது, 10 நிமிடம் ஹெலிகாப்டரிலிருந்து 600 கிலோ பூக்களை தூவி இ.பி.எஸ்-க்கு உற்சாக வரவேற்பளித்துள்ளனர்.
அதன் பின்னர், மாநாட்டு திடலில், 51 அடி உயர கொடி கம்பத்தில் கொடியை ஏற்றி வைத்து அதிமுக எழுச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் எடப்பாடி பழனிசாமி. இதனிடையே, சென்னையில் இருந்து தொடங்கப்பட்ட மாநாட்டின் தொடர் ஓட்ட ஜோதி, எடப்பாடி பழனிச்சாமியிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனுடன் வெள்ளைப்புறாவையம் பறக்க விட்டுள்ளார்.
மேலும், அதிமுகவின் சாதனைகளை பறைசாற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டுள்ளார் இபிஎஸ். அந்த புகைப்பட கண்காட்சியில், எம்.ஜி.ஆரின் உறுப்பினர் அட்டை, ஜெயலலிதா தாக்கப்பட்ட புகைப்படம் போன்றவை இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தடால் புடலாக ஆரம்பித்துள்ள மாநாட்டால், வலையங்குளம் மாநாட்டு மைதானம் அதிமுக தொண்டர்களால் நிரம்பி வழிகிறது.
இதையும் படிக்க || அதிமுக எழுச்சி மாநாடு...பிரமாண்டமான ஏற்பாடுகள்!