தமிழ்நாடு அரசின் 12 மணிநேர வேலை சட்டத்திற்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நேற்றைய சட்டப்பேரவையில், 12 மணி நேரம் வேலை திருத்த சட்டத்தை தமிழ்நாடு அரசு நிறைவேற்றியது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் தரப்பில் இருந்தும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசின் 12 மணிநேர வேலை சட்டத்திற்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், 8 மணிநேர வேலை, வேலைக்கேற்ற ஊதியம் என்பதை தொழிலாளர்கள் நூறாண்டுகளுக்கும் மேலாக அடிப்படை உரிமையாக கடைப்பிடித்து வருவதாக தெரிவித்துள்ளார். ஆனால், தற்போது அதனை திராவிட மாடல் அரசு மற்றியமைக்கும் வகையில் 12 மணிநேர வேலை திருத்த சட்டத்தை கொண்டுவந்துள்ளது.
எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது இந்த சட்டத்தை கடுமையாக எதிர்த்த மு.க.ஸ்டாலின், தற்போது, 12 மணிநேர கட்டாய வேலை திருத்த சட்டத்தை சட்டப் பேரவையில் ஒருதலைப்பட்சமாக நிறைவேற்றி உள்ளதாக குற்றம்சாட்டியவர், தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் இந்த திட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தனது அறிக்கையில் வலியுறுத்தி உள்ளார்.