சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து 'TET' ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படும் என உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில், ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த அரசாணை ரத்து செய்யப்படும் என்ற வாக்குறுதியை அரசு நிறைவேற்ற கோரியும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது, பேசிய அவர், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து ஒரு வார காலத்திற்குள் நல்ல முடிவு எடுக்கப்படும் என உறுதி அளித்தார் .
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆசிரியர் சங்கத்தினர், தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என நம்புவதாக தெரிவித்தனர். மேலும், ஒரு வாரத்தில் தீர்வு காணப்படும் என உயர் கல்வித்துறை உறுதி அளித்ததை அடுத்து தங்களது போராட்டத்தை வாபஸ் பெறுவதாகவும் அவர்கள் அப்போது கூறினர்.
இதையும் படிக்க: விரைவில் மக்களவைத் தேர்தலில் மீண்டு வருவோம்...பாஜக தலைவர்!!