சென்னை மாநகராட்சியின் முதல் அரை நிதியாண்டுக்கான சொத்துவரியை செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரி என்பது பிரதான வருவாயாக உள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட சொத்து உரிமையாளர்களிடமிருந்து அரைநிதியாண்டுக்கு ஒருமுறை சொத்து வரி வசூலிக்கப்படுகிறது. அந்த வகையில் நடப்பு அரைநிதியாண்டுக்கான சொத்து வரியை செலுத்த சென்னை மாநகராட்சி கடந்த ஜுன் மாதம் முதலே அறிவுறுத்தி வருகிறது.
சென்னையில் உள்ள 13.5 லட்சம் சொத்து உரிமையாளர்களிடமிருந்து அரையாண்டுக்கு 750 கோடி ரூபாய் என, ஆண்டுக்கு 1,500 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த வருவாய் வாயிலாக, மாநகராட்சிக்கான அடிப்படை கட்டமைப்புகள், சுகாதார தூய்மை பணிகள், திடக்கழிவுகளை அகற்றுதல், தெரு விளக்குகள் அமைத்தல், பூங்காக்கள் மற்றும் சாலை பராமரித்தல், பொது சுகாதாரம் நோய் தடுப்புப் பணி போன்ற அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998-இன் படி, சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய முதல் அரை நிதியாண்டுக்கான சொத்து வரியை செப்டம்பர் 30க்குள் செலுத்த வேண்டும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.
அவ்வாறு சொத்து வரி செலுத்த தவறும் நிலையில், சொத்து உரிமையாளர்கள் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் கூடுதலாக ஒரு சதவீதம் தனி வட்டியுடன் சொத்துவரி செலுத்த வேண்டுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி வருகிறது.
மேலும் மாநகராட்சி வளாகத்திலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவும், மாநகராட்சி இணையதளம் மூலமாகவும், நம்ம சென்னை செயலி மூலமாகவும் செலுத்தலாம் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.