தமிழ்நாட்டு மீனவர்கள் கைது..! வைகோ கண்டனம்.

தமிழ்நாட்டு மீனவர்கள் கைது..!  வைகோ கண்டனம்.
Published on
Updated on
1 min read

இலங்கை கடற்படையினரால்  15 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து மதிமுக பொதுசெயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- 

இராமேசுவரம் துறைமுக பகுதியிலிருந்து நேற்றுமுன்தினம் ஜூலை 8 ஆம் தேதி 461 விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். இவர்கள் கச்சத்தீவு அருகே இந்திய கடல் பகுதியில்தான் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.

இராமேசுவரத்திலிருந்து கிரீன்ஸ் மற்றும் பாலா ஆகியோருக்கு சொந்தமான 2 விசைப்படகுகளும் கடலுக்குச் சென்றிருந்தன.

இந்தப் படகுகளில் கிறிஸ்து (வயது 40), ஆரோக்கிய ராஜ் (52), ஜெர்மஸ் (33), ஆரோக்கியம் (38), ரமேஷ் (28), ஜெகன் (40), பிரபு (36), பிரியன் ரோஸ் (44), ஜார்ஜ் (30), அந்தோணி (45), பிரதீபன் (35), ஈசாக் (35), ஜான் (30), ஜனகர் உள்ளிட்ட 15 மீனவர்கள் இருந்தனர்.

அந்த 15 பேரையும் எல்லை தாண்டி இலங்கை கடல் பகுதிக்குள் சென்று மீன்பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்படையினர் கைது செய்திருப்பதும், அவர்கள் சென்ற 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்திருப்பதும் கண்டனத்துக்கு உரியது.

கைது செய்யப்பட்ட 15 பேரும் காங்கேசன் துறைமுகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு நீதிமன்றத்தில் நேர் நிறுத்தப்பட உள்ளதாக செய்திகள் வருகின்றன.

கடந்த ஜூன் மாதம் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 22 மீனவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.

இனிமேல், எல்லைதாண்டி வந்து மீன்பிடிக்கக்கூடாது, அவ்வாறு மீண்டும் கைதானால் 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற நிபந்தனையுடன் மீனவர்களை  விடுதலை செய்யப்பட்டனர்.

தற்போது மீண்டும் நமது மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக பொய்யான குற்றம் சாட்டி சிங்களக் கடற்படை கைது செய்து உள்ளதால், நீதிமன்றத்தின் மூலம் சிறைத்தண்டனை அளிக்க இலங்கை அரசு குறியாக இருக்கும்.

எனவே, ஒன்றிய அரசு உடனே தலையிட்டு  தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசுக்கு அறிவுறுத்த வேண்டும்.

என தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com