தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாடு மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பொறுப்பேற்க வேண்டுமென பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் நடைபெறவுள்ள பள்ளி மாணவர்களுக்கான தேசிய விளையாட்டுப் போட்டிகளில், தமிழக அணி சார்பில் இதுவரை விளையாட்டு வீரர்கள் தேர்வு செய்யப்படவில்லை. இதனால் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழக வீரர்கள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாடு மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை கண்டித்து செய்தி வெளியிட்டுள்ளார். இதுகுறித்த அவரது ட்விட்டர் பக்கத்தில், தமிழக மாணவர்கள் தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்காதது குறித்து ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில் முதன்மை மாநில உடற்கல்வி ஆய்வாளர் மீது பள்ளிக்கல்வித்துறை கண்துடைப்பு நடவடிக்கை எடுத்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் பொறுப்பின்மையை மறைக்க, அரசு அதிகாரிகளைப் பலிகிடாயாக்கி, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பிரகாசிக்கும் கனவுடன் பங்கேற்க இருந்த பள்ளி மாணவர்களின் கனவுகளைக் கலைத்திருப்பது நியாயமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.