சென்னையை அடுத்த எண்ணூரில் விரைவில் படகு சவாரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
சென்னை மெரினா கடற்கரையில் படகு சவாரி தொடங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. ஆனால் மெரினா கடற்கரையில் அதற்கான சாத்தியகூறு இல்லாததால், சென்னையை அடுத்த எண்ணூரில் படகு சவாரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் ராயல் மெட்ராஸ் யாக்ட் உடன் இணைந்து படகு சவாரி தொடங்க பணிகள் நடைப்பெற்று வருவதாகவும் சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தலங்களை மேம்படுத்த டெண்டர் கோரப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாக கூறியதோடு, வரும் காலங்களில் தமிழ்நாடு முக்கிய சுற்றுலாத்தலமாக மாறும் என்றும் கூறினர்.
அதேபோல், தீவுத்திடலில் 47வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி நடைபெற்ற நிலையில், பொருட்காட்சியை மொத்தம் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டதாகவும், இதன் மூலம் டிக்கெட் கட்டண வருவாய் மட்டும் ரூ.1 கோடிக்கு மேல் தமிழ்நாடு அரசிற்கு வருவாய் கிடைத்துள்ளதாகவும் சுற்றுலாத்துறை அதிகாரிகள் கூறியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: மதுரை மாவட்ட நீதிமன்றத்தின் கூடுதல் கட்டடத்திற்கு அடிக்கல்...!!