பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு தனி கிரிக்கெட் மைதானம்; வெள்ளிப் பதக்கம் வென்ற வீரர் கோரிக்கை! 

பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு தனி கிரிக்கெட் மைதானம்; வெள்ளிப் பதக்கம் வென்ற வீரர் கோரிக்கை! 
Published on
Updated on
2 min read

தமிழகத்தில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் பயிற்சி மைதானம் இல்லாததால் வாடகைக்கு எடுத்து பயிற்சி வருவதாகவும் தமிழக அரசு எங்களுக்கு நிரந்தரமான பயிற்சி மைதானம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என உலக பார்வை மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மகாராஜன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் துரைசாமி நகர் பகுதியை சேர்ந்த தம்பதி சிவசுப்பிரமணியன் மற்றும் சண்முககனி. இவர்களுக்கு மகாராஜன் என்ற மகனும், செல்வி என்ற மகளும் உள்ளனர். மகாராஜன்(26) பிறந்தது முதல் பார்வை மாற்று திறனாளியாக உள்ளார். மகாராஜன் பார்வையற்றவராக இருந்தாலும் தனது தனி திறமை ஆர்வத்தால் கிரிக்கெட் போட்டியில் ஆர்வமாக இருந்துள்ளார். இந்நிலையில், இந்திய அணி சார்பில் பார்வையற்றோருக்காக நடக்கும் கிரிக்கெட் போட்டியில்  தேர்வு செய்யப்பட்டு லண்டன் சென்றார். 

இதனைத் தொடர்ந்து லண்டனில் உள்ள பெர்ஹிங்ஹாம் நகரில் நடைபெற்ற உலக பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது. இந்த அணியில் இடம் பெற்ற மகாராஜனும் வெள்ளிப் பதக்கத்துடன் நேற்று இரவு விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அவரை குடும்பத்தினர் வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து தான் பங்கு பெற்ற பார்வையற்றோர் கிரிக்கெட் போட்டி குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், பிறவியிலிருந்து கண் பார்வை இழந்த தான் தனது பள்ளிப்படிப்பை பாளையங்கோட்டையில் உள்ள சிறப்பு பள்ளியில் பயின்றேன். பொழுதுபோக்கிற்காக கிரிக்கெட்டை விளையாடியதில் ஆர்வம் மிகுதியால் எனது வாழ்க்கையை கிரிக்கெட்டுக்குள் இணைத்து கொண்டேன். உலக பார்வையற்றோருக்கான நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் இந்திய பெண்கள் அணி தங்கப்பதக்கமும், ஆண்கள் அணி வெள்ளி பதக்கமும் வென்றுள்ளோம் எனக் கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், தமிழக அரசு எங்களைப் போன்ற பார்வையற்றவர்களுக்கான கிரிக்கெட் அகாடமிக்கு பயிற்சிக்காக தற்போது வரை வாடகை மைதானத்தில் பயிற்சி பெற்று வருவதாகவும், நிரந்தரமான கிரிக்கெட் மைதானம் அமைத்து தர வேண்டும் எனவும், தனக்கு அரசு வேலை ஏற்படுத்தி தரவேண்டும்  எனவும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார். மேலும், இந்தியாவிலிருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடைபெற்ற உலக பார்வை மாற்றுத்திறனாளிகள்  கிரிக்கெட் போட்டிக்காக சென்ற இந்திய அணியில் தமிழகத்திலிருந்து தான் ஒருவர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com