"கர்நாடகாவில் தண்ணீர் பற்றாக்குறை; தமிழ்நாட்டிற்கு காவிரி நீரைத் திறந்து விட முடியாது" சித்தராமையா திட்டவட்டம்!!

Published on
Updated on
1 min read

கடும் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதால் தமிழ்நாட்டுக்கு காவிரி நீரைத் திறந்து விட முடியாது என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

காவிரி நீர் விவகாரம் தொடர்பாக சித்தராமையா தலைமையில் பெங்களூருவில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அப்போது கர்நாடகாவில் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதால் உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறந்து விட முடியாது என முதலமைச்சர் சித்தராமையா கூறியதன் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், காவிரி நதி நீர் ஒழுங்காற்றுக் குழுவில் புதிய மனு தாக்கல் செய்யவுள்ளதாகவும், அனைத்துக்கட்சி கூட்டத்தின் தீர்மானத்துடன் உச்சநீதிமன்றத்தை அணுகவுள்ளதாகவும் கூறினார். இவ்விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி, மத்திய நீர்வளத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

காவிரி நீர் கிடையாது என்ற கர்நாடகாவின் அறிவிப்பு தமிழ்நாடு விவசாயிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் காவிரி விவகாரம் தொடர்பாக, வரும் 19ம் தேதி தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ரயில் மறியல் போராட்டம் நடத்துவதாக காவிரி விவசாயிகள் சங்க பொது செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com