குஷ்பூ குறித்து அவதூறு பரப்பிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி...நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்ட நீதிமன்றம்!

குஷ்பூ குறித்து அவதூறு பரப்பிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி...நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்ட நீதிமன்றம்!
Published on
Updated on
1 min read

நடிகை குஷ்பு குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் பேச்சாளா் சிவாஜி கிருஷ்ண மூா்த்திக்கு ஜாமின் வழங்கி சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னை எருக்கஞ்சேரியில் ஜூன் 16 ஆம் தேதி நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற தலைமைக் கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ண மூா்த்தி, ஆளுநர் ஆர்.என்.ரவி, எடப்பாடி பழனிசாமி, நடிகை குஷ்பு உள்ளிட்டோா் குறித்து அவதூறாக பேசியிருந்தார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. 

தொடர்ந்து இந்த வீடியோ தொடர்பாக கொடுங்கையூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவான வழக்கில், கடந்த ஜூன் 18 ஆம் தேதி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டார், தொடர்ந்து, ஜாமீன் கோரி தாக்கல் செய்த இரு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மூன்றாவது முறையாக ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். 

இந்த மனு மாவட்ட முதன்மை நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பிரபுதாஸ் ஆஜராகி கூட்டத்தினரை கவர்வதற்காக நகைச்சுவையுடன் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும், யாரையும் குறிப்பிட்டு தவறாக பேசவில்லை எனவும் வாதிட்டார்.

தொடர்ந்து, பெருநகர தலைமை குற்றவியல் வழக்கறிஞர் தேவராஜன் ஆஜராகி, இதேபோல் தொடர்ந்து பேசிவருவதாகவும், தற்போது உயர் பதவிகளில் இருக்கக்கூடியவர்கள் குறித்து பேசியுள்ளதாகவும் கூறி, ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்தார்.

இருதரப்பு வாதத்தையும் கேட்டறிந்த நீதிபதி, எதிர்காலத்தில் இதுபோல அநாகரிகமாக பேசக்கூடாது, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் தினமும் காலை ஆஜராகி கையெழுத்திட வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

முன்னதாக, சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் டிஸ்மிஸ் செய்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com