தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது செல்லும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்த நிலையில், அவரை விடுவிக்கக் கோரி அவருடைய மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர்.
இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த, 3-வது நீதிபதியான சி.வி.கார்த்திகேயன், நீதிபதி டி.பரத சக்கரவர்த்தியின் தீர்ப்பை உறுதி செய்தார். அவர் தனது தீர்ப்பில், செந்தில் பாலாஜியும் சட்டத்துக்கு உட்பட்டவர்தான் என்பதால் அவரை அமலாக்கத் துறை கைது செய்தது செல்லும் என்றும், அவர் பரிபூரணமாகக் குணமடைந்த பிறகு அவரை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்றும் தீர்ப்பளித்தார்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பிலும், அமலாக்கத் துறை தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஏ.எஸ்.போபண்ணா மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டது. இரண்டு தரப்பிலும் பலமான வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபலும் அமலாக்கத் துறை தரப்பில் துஷார் மேத்தாவும் ஆஜராகி தங்கள் வாதத்தை முன்வைத்தனர். செந்தில் பாலாஜியை தனிப்பட்ட முறையில் காவலில் எடுத்து விசாரிப்பது மிகவும் முக்கியமானது என அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த 2-ம் தேதி நிறைவடைந்த நிலையில், செந்தில் பாலாஜி கைதுக்கு எதிராக தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மேலும், அவர் கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் இல்லை எனவும், அவரை அமலாக்கத் துறை கைது செய்தது சரி என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும்,ஆகஸ்ட் 12 வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க || மக்களவையில் பங்கேற்ற "வயநாடு எம்.பி" ராகுல்காந்தி!!