உடல் தளர்ந்தாலும் மனம் தளராத தன்னம்பிக்கை... முதல்வரின் வாழ்த்துக்கு ஏங்கும் மாற்றுத்திறனாளி ஓவியர் முத்துச்செல்வன்...

உடல் தளர்ந்தாலும் மனம் தளராத தன்னம்பிக்கை... முதல்வரின் வாழ்த்துக்கு ஏங்கும் மாற்றுத்திறனாளி ஓவியர் முத்துச்செல்வன்...

உதகையில் உள்ள ஆதரவற்றோர் இல்லம் ஒன்றில் தங்கியுள்ள சிலர் தங்களது தனி திறன் காட்டி வாழ்வில் மன வலிமையிழந்த பலருக்கும் தன்னம்பிக்கை மனிதர்களாய் காட்சி தருவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து திரும்பி பார்க்க வைத்துள்ளது.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும், நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகள் உள்ள நிலையில், ஒரு சில விடுதிகள் மட்டுமே நல்ல பயன்பாட்டில் இருந்து வருகிறது. 

அந்த வகையில் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் உதகை முள்ளிக்கொரை பகுதியில் உள்ள டாக்டர் அப்துல் கலாம் பசுமை மற்றும் கல்வி அறக்கட்டளை நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதி உதகை நகராட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.

இங்கு வயது முதிர்ந்தவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், குடும்பத்தாரால் ஒதுக்கப்பட்டவர்கள் என 89 பேர் தங்கியுள்ளனர்.

சிலர் கேரளா, கர்நாடகா, கோயமுத்தூர், மேட்டுப்பாளையம் போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும், பல மாவட்டங்களில் இருந்தும் உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் போன்ற பகுதிகளில் அவர்களை விட்டுவிட்டு சென்று விடுகின்றனர். அவர்கள் திக்கு திசை தெரியாமல், சாப்பாட்டுக்கும், தூங்குவதற்கும் இடமின்றி கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

அவர்களை அப்துல் கலாம் அறக்கட்டளை தன்னார்வலர்கள் இனம் கண்டு விடுதிக்கு அழைத்துச் சென்று அவர்களை பராமரித்து வருகின்றனர்.

அவர்களில் சிலர் அவர்களது தனி திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களை சந்திக்க சென்ற போது, முத்துச்செல்வன் என்பவர் அழகான ஓவியங்களை வரைந்து கொண்டிருந்தார்.

இவர் குறித்து அறக்கட்டளையின் தலைவர் தஸ்தீகிரிடம் விசாரிக்கும் போது, அவர் குன்னூர் பழைய அருவங்காடு பகுதியை சேர்ந்த ராமசாமி, அன்னம்மாள் தம்பதியினரின் கடைசி மகனான முத்து செல்வன். இவர் ஒரு ஓவியர் பக்கவாதத்தால் ஒரு கால் செயல் இழந்த நிலையில், முடங்கி போனார். கவனிப்பாரற்று இருந்த நிலையில் ஆதரவற்றோர் இல்லத்திற்கு வந்துள்ளார். இவர் வந்து ஓராண்டுக்கு பிறகே இவர் ஓவியர் என்பது தெரியவந்தது என அறக்கட்டளையின் தலைவர் தஸ்தகீர் தெரிவித்தார். அதன் பிறகு முத்து செல்வனிடம் ஓவியங்கள் வரைய பெயிண்ட், பிரஸ், ஓவியம் வரையும் தாள் உள்ளிட்ட பொருட்களை அவருக்கு வாங்கி கொடுத்து ஓவியம் வரைய அவரை ஊக்குவித்துள்ளார்.

அதன் பின்னர் முத்து செல்வன் வரைந்த ஓவியங்கள் அந்த இல்லத்தையே அலங்கரிக்க துவங்கியுள்ளது. 

இதுகுறித்து முத்து செல்வன் கூறுகையில், ஆதரவற்றோர் இல்லத்திற்கு தனது நண்பர்கள் அழைத்து வந்து விட்டதாகவும், இங்கு உள்ளவர்கள் தன்னை ஊக்கப்படுத்தியதால், ஓவியங்களை வரைந்து வருவதாக கூறினார். மேலும் தன்னைப் போன்ற மாற்றுத்திறனாளிகளிடம் உள்ள தனித் திறமைகளை கண்டுபிடித்து அவர்களை ஊக்குவிக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என கூறிய அவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் புகைப்படத்தை தற்போது ஓவியமாக வரைந்து வருவதாகவும் அதனை அவரிடம் நேரில் சந்தித்து வாழ்த்து பெற வேண்டும் என்பது அவரின் விருப்பமாக இருப்பதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

அறக்கட்டளையின் தலைவர் தஸ்தகீர் கூறுகையில், ஆதரவற்றோர் இல்லத்தில் மாற்றுத்திறனாளிகள் பலர் உள்ள நிலையில் அவர்களுக்கென பல தனிதிறமைகள் உள்ளது. அனைவருக்கும் எடுத்துக்காட்டாக முத்துச்செல்வன் இருந்து வருகிறார். இவர் தற்போது வரை 35க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்து உள்ளார். இவரைப் போன்ற தனித்திறமைகளை உள்ளடக்கிய மாற்றுத் திறனாளிகளை வெளி உலகிற்கு எடுத்துச் செல்லும் வகையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  என்.ஐ.ஏக்கு ரகசிய வந்த கடிதம்.... நாடு முழுவதும் எச்சரிக்கை விடுத்த என்.ஐ.ஏ.....