உவரி அடுத்த கூடுதாழை கிராமத்தில் கடல் அரிப்பால் 30 மீட்டர் வரை கடல் நீர் ஊருக்குள் புகுந்ததுள்ளதால் தூண்டில் வளைவு அமைக்க கோரி மீனவர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை மாவட்டம் உவரி அடுத்த கூடுதாழையில் 300க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு தற்போது கடந்த சில நாட்களாக கடல் அரிப்பு அதிகமாக இருப்பதால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனா். இந்த நிலையில் நேற்று முன்தினம் கடல் அரிப்பு ஏற்பட்டு சுமார் 30 மீட்டர் வரை கடல் நீர் ஊருக்குள் புகுந்ததோடு கடற்கரையை ஒட்டிய மின்கம்பம் ஒன்றும் சாய்ந்து விழுந்தது. இதனால் கூடுதாழை காராமத்தை சோ்ந்த மீனவா்கள் உடனடியாக் மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்து மின் இணைப்பை துண்டிக்கச் செய்தனா்.
கடல் அரிப்பின் காரணமாக கடற்கரையில் நாட்டுப் படகுகளை நிறுத்த முடியாத சூழலால் கிராம மக்கள் தவித்து வருகின்றனா். கடல் நீர் வீடுகளுக்குள் புகுந்துவிடும் என்ற அச்சத்தால் மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் நேற்று மாலை திடீரென மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இன்று தூண்டில் வளைவு அமைக்க வலியுறுத்தி அனைத்து மீனவர்களும் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவும் முடிவு செய்துள்ளனர். தற்போது நடந்து வரும் கடல் அரிப்பின் காரணமாக கூடுதாழை கிராம மக்களிடையே பதற்றமும் பரபரப்பும் நிலவுகிறது.
இதையும் படிக்க: எந்த ஒரு நீதிமன்றமும் தனக்கு எதிராக தீர்ப்பளிக்க முடியாது.....!!