”நான் சிகரெட் குடிப்பதை தடுத்து நிறுத்துவார்; என் மீது அளவு கடந்த அன்பு வைத்திருப்பவர்” - நடிகர் ரஜினிகாந்தின் உணர்வு பூர்வமான பேச்சு!

”நான் சிகரெட் குடிப்பதை தடுத்து நிறுத்துவார்; என் மீது அளவு கடந்த அன்பு வைத்திருப்பவர்” - நடிகர் ரஜினிகாந்தின் உணர்வு பூர்வமான பேச்சு!

சென்னை தியாகராய நகரில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள நடிகர் சரத்பாபுவின் உடலுக்கு திரையுலகினர், பொதுமக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் கடந்த 1951-ம் ஆண்டு பிறந்த சரத்பாபு, 1973-ம் ஆண்டு ராமராஜ்ஜியம் என்னும் தெலுங்கு திரைப்படம் மூலம் திரையுலகில் தடம் பதித்தார். பின்னர் பாலசந்தர் இயக்கத்தில் வெளியான பட்டினப்பிரவேசம் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என சுமார் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான நினைத்தாலே இனிக்கும், முள்ளும் மலரும், அண்ணாமலை, முத்து, சலங்கை ஒலி உள்ளிட்ட திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன.

இதையும் படிக்க : இனி தனியார் பள்ளிகளில் 'தமிழ் பாடம் கட்டாயம்'...தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அறிவுறுத்தல்!

இந்நிலையில், உடல் நலக்குறைவால் ஐதராபாத்தில் உள்ள ஏ.ஐ.ஜி. மருத்துவமனையில் ஒரு மாதத்திற்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த நடிகர் சரத்பாபு நேற்று காலமானார். இதனையடுத்து, ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டு தியாகராய நகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு திரையுலகினர், பொதுமக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் சரத் பாபு உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சரத் பாபுவுடன் தனக்கு இருக்கிற உறவை உணர்வுப்பூர்வமாக கூறினார். ”நான் நடிகன் ஆவதற்கு முன்பே சரத் பாபு ஒரு நல்ல நண்பர். அவருடன் சேர்ந்து நடித்த திரைப்படங்கள் முள்ளும் மலரும், முத்து, அண்ணாமலை உள்ளிட்ட அனைத்தும் சூப்பர் ஹிட் தான். என் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்த சரத் பாபு, நான் சிகரெட் புடித்தால் தடுத்து நிறுத்துவார். ஆனால், அப்படி பட்டவர் அண்ணாமலை படம் எடுக்கும் போது ஒரு டையலாக்கை என்னால் பல டேக் எடுத்ததால், அவரே எனக்கு சிகரெட் எடுத்து கொடுத்து புடிக்க சொன்னார். அதன்பின் அந்த டையலாக் ஒகே ஆனது. இப்படி தன் மீது மிகுந்த அன்பும், அக்கறையும் கொண்ட சரத் பாபுவின் இறப்பு ஏற்று கொள்ள முடியவில்லை” என்று உணர்வு பூர்வமாக கூறினார். இதனிடையே, நடிகர் சரத்பாபுவின் உடலுக்கு இறுதிச் சடங்கு இன்று மாலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.