கலவரமாக மாறிய போராட்டம்...விளக்கம் அளிக்க உத்தரவிட்ட தமிழக காங்கிரஸ்!

கலவரமாக மாறிய போராட்டம்...விளக்கம் அளிக்க உத்தரவிட்ட தமிழக காங்கிரஸ்!
Published on
Updated on
1 min read

சத்தியமூர்த்தி பவனில் நடந்த மோதல் தொடர்பாக ரூபி மனோகரன், ரஞ்சன் குமார் ஆகியோரிடம் விளக்கம் கேட்டு காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

முற்றுகைப் போராட்டம்:

தமிழக காங்கிரஸின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்திபவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியை முற்றுகையிட்டு நெல்லை மாவட்ட காங்கிரசார் தர்ணா போராட்டம் நடத்தினர். நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட வட்டார காங்கிரஸ் தலைவர்கள் இருவரை நீக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில பொருளாளர் ரூபி மனோகரன் தலைமையில் இந்த முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

தாக்கிக்கொண்ட ஆதரவாளர்கள்:

அப்போது, இந்த போராட்டம் தொடர்பாக கே.எஸ்.அழகிரி, ரூபி மனோகரனிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஆனால், அதில் உடன்பாடு எட்டவில்லை. இதனால் இந்த ஆலோசனை கூட்டத்தை முடித்துவிட்டு புறப்பட்ட கே.எஸ்.அழகிரியை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால் ஆத்திரமடைந்த அவரது ஆதரவாளர்கள் ரூபி மனோகரனின் ஆதரவாளர்களை கடுமையாக தாக்கினர். இந்த சம்பவத்தால் சத்தியமூர்த்திபவனில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வந்தது. 

தீர்மானம் நிறைவேற்றம்:

இந்நிலையில், நேற்று நடைபெற்ற மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தின் போது, ரூபி மனோகரன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 62 மாவட்ட தலைவர்கள் கையெழுத்திட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது விசாரணை நடத்துமாறு மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தமிழக ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு உத்தரவிட்டார்.

இந்த உத்தரவையடுத்து, தமிழக காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி, வரும் 24 ஆம் தேதி இதற்கான விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்தார். மேலும், தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில பொருளாளர் ரூபி மனோகரன் மற்றும் தமிழக காங்கிரஸ் கட்சியின் எஸ்சி துறை தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் ஆகியோருக்கு, வரும் 24 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com