பரோட்டா கடையில் கெட்டுப்போன இறைச்சி... கடைக்கு சீல்!!

பரோட்டா கடையில் கெட்டுப்போன இறைச்சி... கடைக்கு சீல்!!

தென்காசி மாவட்டம் பார்டர் பரோட்டா கடையில், கெட்டுப் போன இறைச்சி பயன்படுத்தப்படுவதை கண்டறிந்த அதிகாரிகள், கடையை மூடி சீல் வைத்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் பிரபலமாக இருக்கும் கடை மீதான குற்றச்சாட்டு குறித்த முழு விவரம் இதோ..

பரோட்டாவுக்கு பேமஸ் என்றால் பலர் கூறுவது பார்டர் ரஹமத் புரோட்டா கடை... தமிழ்நாட்டில் பல்வேறு மூலைகளில் இருந்து தென்காசி செல்லும் சுற்றுலா பயணிகள், இந்த பரோட்டா கடையில் பல மணி நேரங்கள் காத்திருந்து பரோட்டா சாப்பிடுவது வழக்கம். 

பரோட்டா, சால்னாவை, மணக்க மணக்க ருசியுடன் வழங்கி வந்த இந்த ரஹமத் கடை, தற்போது சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. செங்கோட்டை அருகே உள்ள பிரானூர் பார்டர் பகுதியில் செயல்பட்டு வந்த இந்த ரஹமத் கடையில், தரமற்ற உணவுப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவு விநியோகம் செய்யப்படுவதாக, உணவு பாதுகாப்புத் துறைக்கு ரகசிய தகவல் ஒன்று சென்றது. 

அதன் அடிப்படையில் கடைக்கு நேரடியாக சென்ற உணவு சுகாதாரத்துறை அதிகாரிகள், உணவு பொருட்களை ஆராய்ந்து பார்க்க உத்தரவிட்டனர். ஆனால், அதிகாரிகளை அலட்சியம் செய்த கடை உரிமையாளர், ஆய்வு செய்வதற்கு மறுத்து விட்டதனால், அந்த பகுதியில் சில நிமிடங்கள் பரபரப்பு நிலவியது.  

இதையடுத்து அதிரடியாக நடந்த சோதனையில், கடை குடோனுக்குள் பல நாட்கள் தேக்கி வைக்கப்பட்டிருந்த கறிக்கோழி இறைச்சி மற்றும் பயன்படுத்த முடியாத 4 மூட்டை மிளகாய் வத்தல் ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சால்னாவுக்கு தேவைப்படும் மிளகாய் கரைசலும் இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு தயார் செய்யப்பட்டது என்பதும் தெரியவந்ததால், கடையில் நடைபெறும் வேலைகளை உடனே நிறுத்த அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து, குடோனில் இருந்த சுமார் 200 கிலோ கெட்டுப் போன இறைச்சியை பறிமுதல் செய்து குப்பையில் வீசிய அதிகாரிகள், குடோனையும், கடையையும் மூடி சீல் வைத்தனர். பல வருடங்களாக, பரோட்டா என்றால் பார்டர் பரோட்டாதான் எனக் கூறி, அங்கு சாப்பிட ஆர்வமுடன் இருந்த உணவு விரும்பிகள் அனைவருக்கும், இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க:  கோயிலுக்கு செல்வதாய் கூறி பணம் வசூல்.... டாஸ்மாக்கில் ஆர்ப்பாட்டம்!!