இனிமேல் சென்னையில் வெள்ளத்துக்கு ரெட் கார்டு..? மக்களுக்கு கைகொடுக்குமா ’ஸ்பாஞ்ச் பார்க்’ திட்டம்..?

இனிமேல் சென்னையில் வெள்ளத்துக்கு ரெட் கார்டு..?   மக்களுக்கு கைகொடுக்குமா ’ஸ்பாஞ்ச் பார்க்’ திட்டம்..?
Published on
Updated on
2 min read

சென்னை மக்களுக்கு நவம்பர் டிசம்பர் வந்து விட்டாலேயே ஒரு வித அச்சம் நிச்சயம் தொற்றிக் கொள்ளும். பருவமழையின் காரணமாக ஊருக்குள் வெள்ளம் சூழ்ந்திருப்பதும், வெள்ளத்தில் இருந்து மீள முடியாமல் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதும் தொடர்கதையாகி வருகிறது. 

ஆனால் இவ்வாறான வெள்ள பாதிப்புகளில் தப்பிக்க புதிய முயற்சியை கையில் எடுத்திருந்தது சென்னை மாநகராட்சி. அதுதான் ஸ்பாஞ்ச் சிட்டி.  ஏற்கெனவே மெட்ரோ சிட்டியாக தரம் உயர்ந்த சென்னை மாநகரம் தற்போது ஸ்பாஞ்ச் சிட்டியாக மாறி வருகிறது. அது என்ன ஸ்பாஞ்ச் சிட்டி என்ற கேள்வி அனைவரிடத்திலும் உண்டாகலாம். 

தேங்கிய தண்ணீரை ஸ்பாஞ்ச் அதாவது பஞ்சு மூலம் உறிஞ்சி அதனை வேறு இடத்தில் சேர்க்கும் இந்த சாதாரண பாணியை பிரமாண்டமாக உருவாக்குவதுதான் ஸ்பாஞ்ச் சிட்டி திட்டமாகும். அமெரிக்காவின் நியூயார்க் நகரம், சீனாவின் ஷாங்காய் நகரம் போன்ற இடங்களில் வரவேற்பை பெற்ற அதே திட்டம்தான் தற்போது சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

அதாவது சென்னையின் பல்வேறு நகரில் முக்கியமாக வெள்ளம் சூழ்ந்திருக்கும் பகுதிகள் அருகே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதிக மழையின் காரணமாக ஊருக்குள் வரும் நீரானது போக்கிடம் இன்றி வீட்டை சுற்றி தேங்குவது வழக்கம். அவ்வாறு தேங்கும் நீரை தாழ்வான பகுதிகளை நோக்கி ஓடச் செய்து அருகில் உள்ள பூங்காக்களுக்கு திருப்பப்படும். 

இவ்வாறு வரும் தண்ணீர் பூங்காக்களில் இருந்தே ஸ்பாஞ்ச் முறையில் சேமிக்கப்பட்டு அருகில் உள்ள நீர்நிலைகளுக்கு திருப்பப்படும். தமிழ்நாடு அரசின் சிங்கார சென்னை 2.0  திட்டத்தின் கீழ் ஸ்பாஞ்ச் பூங்காக்களுக்கு முதற் கட்டமாக 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. 

சென்னையில் உள்ள 127 திறந்தவெளி பூங்காக்களை கண்டறியப்பட்டு, அதில் 57 பூங்காக்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

ஸ்பாஞ்ச் பார்க் எனப்படும் இந்த பூங்காக்களில் தண்ணீரை உறிஞ்சும் செங்கற்கள், மணல் போன்றவற்றை பயன்படுத்தப்படும். தண்ணீர் தேங்காதவாறு தடையின்றி ஓடும் விதமாக பெரிய குழாய்கள் அமைக்கப்பட்டு அதற்கு மேல் ஸ்பாஞ்ச் கற்கள் பதிக்கப்படும். 

இவ்வாறு மேற்கொள்வதால் மழை பெய்து முடித்த அரை மணி நேரத்தில் எந்த இடத்திலும் தண்ணீர் தேங்குவதற்கான ஆதாரமே இல்லாதவாறு உறிஞ்சி எடுத்துக் கொள்ளப்படும். அதோடு இந்த பூங்காவில் பசுமைப் பரப்பை அதிகரிக்க செய்யும் விதமாக ஸ்பாஞ்ச் குட்டையும் அமைக்கப்பட்டது பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. 

இந்த ஸ்பாஞ்ச் பார்க் முறையில் பெரம்பூர் முரசொலி மாறன் பூங்காவே முதற்கட்ட சோதனையில் வெற்றி கண்டுள்ளது. திரு.வி.க. நகர் மண்டலத்துக்கு உள்பட்ட முரசொலி மாறன் பூங்காவில் 9 ஆயிரம் சதுர அடியில் ஸ்பாஞ்ச் பூங்கா அமைக்கப்பட்டு இந்த பணிகளை சென்னை மேயர் பிரியா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

மழைநீர் சேகரிப்பு வசதி, குடிநீர் வசதி, சி.சி.டி.வி. கேமரா வசதிகள் பொருத்தப்பட்டுள்ள இந்த பூங்காக்களை பொதுமக்கள் பார்வையிட அதிக ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் இந்த ஸ்பாஞ்ச் பார்க் திட்டத்தை விரைவில் நகரம் முழுவதும் செயல்படுத்தினால் எப்பேர்பட்ட மழை வந்தாலும் சென்னை வெள்ளத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளும் என்பதே பொதுமக்களின் கருத்தாக உள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com