திருமண பலாத்காரம்...கடந்து வந்த பாதையும் உச்சநீதிமன்ற தீர்ப்பும்!!!

திருமண பலாத்காரம்...கடந்து வந்த பாதையும் உச்சநீதிமன்ற தீர்ப்பும்!!!
Published on
Updated on
2 min read

இந்த விவகாரத்தில் தனித்தனியான மனுக்கள் உச்ச நீதிமன்றத்தின் வெவ்வேறு அமர்வுகளில் நிலுவையில் உள்ளதாகவும், அவற்றை ஒரு அமர்வு விசாரிக்க வேண்டும் என்றும் மூத்த வழக்கறிஞர் சி.யு.சிங் தெரிவித்துள்ளார்.

திருமண பலாத்காரம்:

திருமணம் என்பது இரண்டு நபர்கள், இரண்டு குடும்பங்களின் ஒப்புதலுடன் நடக்கிறது.  உடலுறவு என்பது இதன் ஒரு பகுதி.  ஆனால், வன்புணர்வு என்பது சம்மதம் இல்லாமல் செய்யப்படும் உடலுறவு ஆகும்.

திருமணம் என்பது ஒரு அழகான, அன்பான உறவாக இருக்கலாம்  ஆனால், சில சமயங்களில் மனம், உடல், நிதி சித்திரவதைகளால் இதில் பல பிரச்சினைகள் எழக்கூடும்.

இதுபோன்ற குடும்ப வன்முறைகள் பாலியல் உறவில் இருந்தாலும், மனைவி மறுத்த பின்னரும் கணவன் உடலுறவு கொள்ளும்படி வற்புறுத்தினால், அது திருமண பலாத்காரம் எனப்படும்.

வழக்குகள்:

திருமணமான கணவன் மனைவியை வன்புணர்வு செய்வது குற்றமாகுமா, ஆகாதா என்ற விவாதம் காலங்காலமாக நடந்துவருகிறது. இது தொடர்பாக வழக்குகள் பல தொடுக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் கணவன், மனைவியைப் பாலியல் பலாத்காரம் செய்வது குற்றம் என்று அறிவிக்க கோரி பல மகளிர் அமைப்புகள் ஒன்றிணைந்து டெல்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தன. இதனை டெல்லி உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வந்த நிலையில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.

ஐபிசி பிரிவு 375:

மனைவியின் விருப்பமின்றி கணவன் உடலுறவு கொள்வது பாலியல் பலாத்காரம் ஆகாது என ஐபிசி பிரிவு 375 கூறுகிறது.

டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பு:

டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்காக கொண்டு வரப்பட்ட இந்த வழக்கின் இரு நீதிபதிகளை கொண்ட அமர்வு வெவ்வேறு தீர்ப்பை வழங்கியது.  ஒரு நீதிபதி ஐபிசி பிரிவு 375க்கு ஆதரவாகவும், மற்றுமொரு நீதிபதி ஐபிசி பிரிவு 375க்கு எதிராகவும் தீர்ப்பளித்தனர்.  இதனால் வழக்கின் விசாரணை உச்சநீதிமன்ற விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டது.

தண்டனை:

இது போன்ற மற்றுமொரு வழக்கில் மனைவியை பலாத்காரம் செய்த நபருக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.  இந்தத் தீர்ப்பை எதிர்த்தும் உச்ச நீதிமன்றத்தில் சில மனுக்கள் நிலுவையில் உள்ளன. 

உச்சநீதிமன்ற விசாரணை: 

திருமண பலாத்காரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை ஜனவரி இரண்டாவது வாரத்தில் தொடங்கும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.  திருமண பலாத்காரத்தை குற்றமாக கருதும் ஐபிசியின் 375வது பிரிவிவை ஆராய்வதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. 

உச்சநீதிமன்றத்தில் புதிய ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு இந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.  இந்த விவகாரத்தில் தனித்தனியான மனுக்கள் உச்ச நீதிமன்றத்தின் வெவ்வேறு அமர்வுகளில் நிலுவையில் உள்ளதாகவும், அவற்றை ஒரு அமர்வு விசாரிக்க வேண்டும் என்றும் மூத்த வழக்கறிஞர் சி.யு.சிங் தெரிவித்துள்ளார். 

வழக்கறிஞர்கள்:

டெல்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீது வழக்கறிஞர் கருணா நந்தி வாதிடுகையில், கர்நாடக உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் ஆஜராகினார்.   இதைத் தொடர்ந்து, இந்த வழக்கை ஜனவரி இரண்டாவது வாரத்தில் விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ரிட் மனு என்பது:

உச்ச நீதிமன்றமோ அல்லது உயர் நீதிமன்றமோ பிறப்பிக்கும் நீதிப் பேராணைதான் ரிட் (Writ) என்பது.  ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் அடிப்படை உரிமைகளும், அரசமைப்பு உரிமைகளும் இருக்கின்றன.  
அரசியலமைப்பில் சொல்லப்பட்ட அடிப்படை உரிமைகளில் ஒன்று மீறப்படும்போது, சட்டஉறுப்பு(Article) 32-ன்படி உச்ச நீதிமன்றத்தில் நீதிப் பேராணை மனு தாக்கல் செய்யலாம்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com