"அடக்குமுறைகளை ஏவுவதன் மூலம் பா.ம.க.வை கட்டுப்படுத்த முடியாது" இராமதாசு எச்சரிக்கை!

"அடக்குமுறைகளை ஏவுவதன் மூலம் பா.ம.க.வை கட்டுப்படுத்த முடியாது" இராமதாசு எச்சரிக்கை!
Published on
Updated on
3 min read

அன்புமணி இராமதாசு கைது செய்யப்பட்டுள்ளதையொட்டி, அடக்குமுறைகளை ஏவுவதன் மூலம் பா.ம.க.வை கட்டுப்படுத்த முடியாது என பாமகவின் நிறுவனர் இராமதாசு தெரிவித்துள்ளார்.

கடலூரில் மாவட்டத்தில் என் எல் சி நிறுவன விரிவாக்கப் பணிகளை எதிர்த்து பாமகவினர் போராடியதையடுத்து அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து, பாமகவினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் காவல்துறையினரின் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதனையடுத்து வன்முறையில் ஈடுபட்டதாக 300க்கும் மேற்பட்ட பாமகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாமகவினர் கைதிற்கு அக்கட்சயின் நிறுவனர் மருத்துவர் ராமாதாசு கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவ்வறிக்கையில், "கடலூர் மாவட்டம் வளையமாதேவி பகுதியில் என் எல் சி விரிவாக்கத்திற்காக நிலங்கள் கையகப்படுத்தப் படுவதைக் கண்டித்து நெய்வேலியில் நடைபெற்ற  போராட்டத்தின் நிறைவில் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கைது செய்யப்பட்டதும், அதைத்தொடர்ந்து பாமகவினர் மீது நடத்தப்பட்ட தடியடி  உள்ளிட்ட தாக்குதல்களும் கண்டிக்கத்தக்கவை. மண்ணைக் காக்க அறவழியில் நடத்தப்படும் போராட்டத்தை அடக்குமுறை மூலம் ஒடுக்க அரசும், காவல்துறையும் முயன்றால் அவர்களுக்கு தோல்வியே கிடைக்கும்" என தெரிவித்துள்ளார்.

காவிரிப் பாசனப் பகுதிகளின் அங்கமான சேத்தியாத்தோப்பு பகுதியில், நன்றாக விளைந்து கதிர்விடும் நிலையில் உள்ள நெற்பயிர்களை இராட்சத எந்திரங்களைக் கொண்டு அழித்து நிலங்களை கைப்பற்றிய என்எல்சி நிறுவனம் மற்றும் கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் அடக்குமுறையையும், அத்துமீறலையும் மனசாட்சியுள்ள எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது என கண்டனம் தெரிவித்த அவர், காவல்துறையினர் என்எல்சி நிறுவனத்தின் ஏவலர்களாக மாறி அன்புமணி இராமதாசை கைது செய்துள்ளதாக விமர்சித்துள்ளார்.

பா.ம.க. தொண்டர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்தியது தான் நிலைமை மோசமடைய காரணம்  என குற்றம் சாட்டியுள்ள அவர், பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த ஒரு தொண்டரை பத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் சூழ்ந்து கொண்டு கண்மூடித்தனமாக தாக்கினார்கள் எனவும் கூறியுள்ளார். மேலும் அவரது ஆடைகள் கிழித்தெறியப்பட்டதாகவும் அந்தக் காட்சிகள் அனைத்து தொலைக்காட்சிகளிலும் நேரலையாக ஒளிபரப்பப்பட்டன எனவும் தெரிவித்துள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சி முன்னெடுத்திருப்பது என்.எல்.சி என்ற ஒற்றை நிறுவனத்திற்கு எதிரான போராட்டம் அல்ல என அறிவுறுத்திய அவர், தமிழ்நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும், சுற்றுச்சூழலை காப்பாற்றவும்,  புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்தவும், இவை அனைத்திற்கும் மேலாக  கடலூர் மாவட்ட மண்ணையும், மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காக நடத்தப்படும் போராட்டம்  என குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் உணர்வுகளை மீறி அவர்களின் மண்ணைப் பறிக்க முயன்றால் என்ன நடக்கும்? என்பதற்கு மேற்கு வங்க மாநிலத்தின் நந்திகிராம் மற்றும் சிங்கூர் அனுபவங்கள் தான் சான்று என சுட்டிக்காட்டிய அவர், அந்த அனுபவத்தில் இருந்து தமிழ்நாடு அரசும், என்எல்சி நிறுவனமும் பாடம் கற்றுக் கொண்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக மாறிவிட்ட நிலையில் என்.எல்.சி நிறுவனம் இனி தேவையில்லை. உடனடியாக அந்த நிறுவனத்தை தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பது தான் கடலூர் மாவட்ட மக்களின் விருப்பம் எனக் குறிப்பிட்ட அவர் இதை தமிழக அரசு புரிந்து கொண்டு மக்களின் பக்கம் நிற்க வேண்டும் எனவும் மாறாக என்.எல்.சியின் அத்துமீறல்களுக்கு துணை போகக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, பாட்டாளி மக்கள் கட்சி அடக்குமுறைகளை எதிர்கொண்டு வளர்ந்த கட்சி. கைது, தடியடி, கண்ணீர்புகை குண்டு வீச்சு போன்ற அடக்குமுறைகளை ஏவுவதன் மூலம் பா.ம.க.வை கட்டுப்படுத்த முடியாது என கூறியுள்ள இராமதாசு, வேளாண் விளை நிலங்கள் கையகப்படுத்தப்படுவது கைவிடப்பட வேண்டும் எனவும் என்எல்சி நிறுவனம் தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com