வணிகர்கள் முதலில் தங்களின் கடைகளின் பெயர்ப்பலகைகளை தனித்தமிழில் அமைக்க மருத்துவர் இராமதாசு கோரிக்கை விடுத்துள்ளார்.
நாளை கொண்டாடப்பட இருக்கும் வணி்கர் தினத்திற்கு வாழ்த்துகள் தெரிவித்து மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மனித சமூகத்தில் உழவர்கள், நெசவாளர்கள் ஆகியோருக்கு அடுத்த நிலையில் தவிர்க்க முடியாதவர்கள் வணிகர்கள். இன்னும் கேட்டால் உழவர்களையும், நெசவாளர்களையும் அவர்கள் உற்பத்தி செய்த பொருட்களை கொண்டு சென்று சேர்ப்பதன் மூலம் அவர்களை சமூகத்துடன் இணைப்பதும் வணிகர்களே என தெரிவித்துள்ளார்.
மேலும், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திரைகடலோடியவர்கள் வணிகர்கள் தான். வணிகர்கள் வருவாய் ஈட்டுவதைக் கடந்து சமூகத்திற்கு ஆற்றிய தொண்டுகள் அதிகம். கடந்த காலங்களில் அன்னைத் தமிழை கடல் கடந்து பல நாடுகளுக்கு கொண்டு சென்று சேர்த்தவர்களும் வணிகர்கள் தான். பிற நாடுகளுக்கு தமிழை கொண்டு சென்ற வணிகர்கள் உள்நாட்டிற்கும் தமிழைக் கொண்டு வர வேண்டும்; தமிழை வளர்க்க வேண்டும் என்பது தான் எனது விருப்பமும், வேண்டுகோளும். அதை நிறைவேற்ற வணிகர்கள் முதலில் தங்களின் கடைகளின் பெயர்ப்பலகைகளை தனித்தமிழில் அமைக்க வேண்டும். தாய் வளர்த்து நாம் வளர்ந்தோம். தமிழ் வளர்த்து நாம் வாழ்வோம் என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, வணிகர்கள் இன்றைய சூழலில் வணிகம் சார்ந்து பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர். வணிகர்கள் அனைவரும் ஒன்றுபட்டு குரல் கொடுப்பதன் மூலம் அனைத்து சிக்கல்களையும் களைந்து வணிகத்தில் வளர்ச்சியடைய இந்த நாளில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.