தமிழைத் தேடி...பயணத்திற்கு ஊடக நண்பர்கள் ஆதரவுக்கோரி இராமதாசு அறிக்கை..!

தமிழைத் தேடி...பயணத்திற்கு ஊடக நண்பர்கள் ஆதரவுக்கோரி இராமதாசு அறிக்கை..!
Published on
Updated on
2 min read

தமிழைத்தேடி...என்ற தலைப்பில் மேற்கொள்ளவிருக்கும் பரப்புரை பயணத்திற்கு ஊடக நண்பர்கள் ஆதரவு அளிக்க வேண்டி பாமக நிறுவனர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் அழிந்து வரும் தமிழ் மொழியைக் காப்பதற்காக தமிழைத் தேடி...நடைப்பயணம் செய்யவுள்ளதால் ஊடக நண்பர்களின் ஆதரவு கோரி அறிக்கை வெளியிட்டுள்ளார் பாமக நிறுவனர் இராமதாஸ். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் எங்கும் தமிழ்...எதிலும் தமிழ் என்பது தான் ஒரு காலத்தில் முழக்கமாக இருந்தது. ஆனால், இன்று எங்கே தமிழ்? என்று கேட்கும் நிலை உருவாகியிருக்கிறது. தமிழ்நாட்டின் பள்ளிக்கூடங்களில் தமிழ் இல்லை; ஆலயங்அளில் தமிழ் இல்லை; உயர்நீதிமன்றங்களில் தமிழ் இல்லை; வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில் தமிழ் இல்லை; இந்த நிலை மாற்றப்பட வேண்டும் என்பது தான் தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மையினரின் விருப்பமாகவ்ம், நோக்கமாகவும் உள்ளது.

தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்தையும், நோக்கத்தையும் நிறைவேற்றும் வகையில், அழிவின் விளிம்பிலிருந்து அன்னைத் தமிழை மீட்டெடுக்க வேண்டும்; அதற்காக தமிழ்நாட்டின் பள்ளிகளில் தமிழை பயிற்றுமொழியாக்கி சட்டம் இயற்ற வேண்டும்; பள்ளிகளில் தொடங்கி கோயில்கள் வரை எல்லா இடங்களிலும் தமிழே ஆட்சி செய்யும் நிலையை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் பிப்ரவரி 21ஆம் நாள் உலக தாய்மொழி நாளில் சென்னையில் தொடங்கி மதுரை வரை தமிழைத் தேடி பரப்புரை பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன்.

அதன்படி, வரும் 21 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் தமிழைத் தேடி...விழிப்புணர்வு பரப்புரை பயணத்தின் தொடக்க நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அதற்கான பட்டியலையும் இந்த அறிக்கையில் வெளியிட்டு, அன்னைத்தமிழை காக்கும் கடமையும், பொறுப்பும் ஊடகங்களுக்கும் இருப்பதால், தமிழைத் தேடி...நடைப்பயணத்தின் அனைத்து நாட்களிலும், அனைத்து ஊர்களிலும் செய்திகள், நேரலைகள், விவாதங்கள் என அனைத்து வகையிலும் ஊடக நண்பர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com