நாளை விசாரணைக்கு வரவுள்ள ராகவா லாரன்ஸின் ‘ருத்ரன்’...!!

நாளை விசாரணைக்கு வரவுள்ள ராகவா லாரன்ஸின் ‘ருத்ரன்’...!!
Published on
Updated on
1 min read

நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் திரைப்படத்தை  வெளியிட விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க கோரி முறையீடு வழக்கை நாளை விசாரணை எடுத்துக் கொள்வதாக சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ஒப்பந்தம்:

நடிகர் ராகவா லாரன்ஸ், நடிகை பிரயா பவானி சங்கர் நடித்து இயக்குனர் கதிரேசன் இயக்கியுள்ள ருத்ரன் திரைப்படம் நாளை மறுதினம் வெளியாகவுள்ளது.  இந்த படத்தின் இந்தி மற்றும் பிற வட இந்திய மொழிகளின் டப்பிங் உரிமையை ரெவன்ஸா குளோபல் வென்சர்ஸ் என்ற நிறுவனம் பெறுவது தொடர்பாக, ருத்ரன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்திருந்தது.

வழக்கு என்ன?:

12 கோடியே 25 லட்சம் ரூபாய் செலுத்துவதாக ஒப்பந்தம் செய்த ரெவன்ஸா நிறுவனம் முதல் கட்டமாக 10 கோடி ரூபாய் செலுத்தியிருந்தது.  இந்நிலையில், 4 கோடியே 50  லட்சம் ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டும் எனக் கூறிய தயாரிப்பு நிறுவனம், திடீரென இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது.  இதுதொடர்பாக, மத்தியஸ்தம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிலையில், ஏப்ரல் 14ம் தேதி படத்தை வெளியிட பட குழு முடிவு செய்துள்ளதாகவும், திட்டமிட்டபடி படத்தை வெளியிட அனுமதித்தால், தங்களுக்கு 10 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்பதால் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என ரெவன்ஸா குளோபல் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, படத்தை ஏப்ரல் 24ம் தேதி வரை வெளியிட இடைக்காலத் தடை விதித்து, மனுவுக்கு பதிலளிக்கும்படி பட தயாரிப்பு நிறுவனத்திற்கு உத்தரவிட்டு இருந்தார்.

நாளை விசாரணை:

இந்நிலையில் ருத்ரன் பட தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குனர் தரப்பில் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு ஆஜராகிய வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் முறையீடு செய்தார்.  படத்தின் இடைக்கால தடையால் தங்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனவும், 700க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் நாளை மறுதினம் படம் வெளியாக உள்ளதாக தெரிவித்தார்.  மேலும் கடந்த 2021 ம் ஆண்டு வழக்கில் மனுதரார்களுக்கு எதிராக உத்தரவை  நீதிமன்றத்தில் மறைத்து மனு தாக்கல் செய்யபட்டுள்ளதாக தெரிவித்தார்.  எனவே ருத்ரன் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் இது தொடர்பான வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் கோரினார்.

இதனையடுத்து வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com