புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் கோயில் தேர் திருவிழா கோலகலமாக தொடங்கிய நிலையில் மத்திய அமைச்சர் அமித்ஷா, குடியரசு தலைவர் திரெளபதி முர்மு ஆகியோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்துள்ளனர்.
ஒடிசா மாநிலம் பூரியில் புகழ்பெற்ற மற்றும் 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஜெகந்நாதர் கோயில் தேர் திருவிழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. ஆண்டு தோறும் ஜெகந்நாதர் கோயில் தேர் திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படும் நிலையில் இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று பாரம்பரிய வாத்தியங்கள் முழங்க கோலகலமாக தொடங்கியது.
இதனிடையே அலங்கரிக்கப்பட்ட 3 தேர்களில் ஜெகந்நாதர், தேவி சுபத்ரா, பாலபத்ரா உலா வரவுள்ளனர். முன்னதாக அதிகாலையில் மூலவர்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிலையில் மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
அதனை தொடர்ந்து கோயில் வளாகம் வந்த குடியரசு தலைவர் திரெளபதி முர்மு, சிறப்பு பூஜையில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். மேலும் தேரோட்ட நிகழ்ச்சியில் இந்தியாவின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. ஜெகந்நாதரின் தேரோட்ட நிகழ்வை விளக்கும் வகையில், பிரபல மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக், ஒடிசாவின் பூரி கடற்கரையில் 125 மணல் ரதங்களையும், ஜெகந்நாதரின் மணல் சிற்பத்தையும் உருவாக்கியுள்ளார்.
Jai Jagannath