தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீடு ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவிக்கப்பட்டது மற்றும் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி விடுவிக்கப்பட்ட உத்தரவுகளுக்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார்.
கடந்த 2008-ம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன் என்பவருக்கு, ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் மீது கடந்த 2012-ம் ஆண்டு , அதிமுக ஆட்சியின்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து சென்னை எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார்.
இதேபோல 2001- 06 ம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சி காலத்தில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த வளர்மதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இருந்து வளர்மதி உள்ளிட்டோரை விடுவித்து ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம், 2012ம் ஆண்டு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். இந்த இரு வழக்குகளும் நாளை (செப்டம்பர் 8) விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளன.
ஏற்கனவே அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மீது தாமாக முன் வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இதேபோல வழக்குகளை விசாரணைக்கு எடுப்பதாக தெரிவித்திருந்த நிலையில், தற்போது அமைச்சர் பெரியசாமி மீதும், முன்னாள் அமைச்சர் வளர்மதி மீதும் வழக்குகளை விசாரணைக்கு எடுத்திருக்கிறார்.
இதையும் படிக்க:ஜி - 20 மாநாடு; டெல்லியில் உச்சக் கட்ட பாதுகாப்பு!