
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் அரிவாளால் வெட்டப்பட்டு, நெல்லை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களை அமைச்சர் தங்கம் தென்னரசு, அவைத்தலைவர் அப்பாவு ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
நாங்குநேரியை அடுத்த பெருந்தெருவைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவன் சின்னதுரை மற்றும் அவரது சகோதரி சந்திரா ஆகியோர், சக மாணவர்களால் கொடூரமாக வெட்டப்பட்டனர். தற்போது மாணவன் மற்றும் அவரது தங்கை இருவரும் நெல்லை பல்நோக்கு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சிறார்கள் இருவரையும் அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டப்பேரவை தலைவர் அப்பாவு ஆகியோர் சிகிச்சை பெற்று வரும் மாணவன் மற்றும் அவரது தங்கையை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். அப்போது மாணவர் சின்னத்துரையின் தாயார் அம்பிகாவதியிடம் முதலமைச்சர் தொலைப்பேசி வாயிலாக நலம் விசாரித்தார்.
பின்னர் திமுக சார்பில் மாணவரின் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சிகிச்சையில் உள்ள சிறார்களை பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், மாணவர் சின்னதுரையின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தார்.