டிக்கெட் முன்பதிவில் சிக்கல்: ரசிகர்கள் குற்றச்சாட்டு..!

டிக்கெட் முன்பதிவில் சிக்கல்:  ரசிகர்கள் குற்றச்சாட்டு..!
Published on
Updated on
1 min read

கரூரில் லியோ திரைப்படத்திற்கான ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்வதில் சிக்கல் இருப்பதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

கரூர் மாநகராட்சி பகுதியில் அமைந்துள்ள 7 திரையரங்குகளில், 5 திரையரங்கங்களில் விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் வருகின்ற 19-ஆம் தேதி வெளியாகவுள்ளது. கரூர் திரையரங்கு உரிமையாளர்கள் சார்பில் "கரூர் சினிமாஸ்" என்ற வெப்சைட் மூலம் ரசிகர்கள் புதிய திரைப்படங்களுக்கு ஆன்லைன் வழியாக புக்கிங் செய்யும் நடைமுறை உள்ளது.

இந்த நிலையில், லியோ திரைப்படத்திற்கான புக்கிங் நேற்று மாலை சுமார் 6 மணி அளவில் வெளியானது. ஆனால், 10 நிமிடத்திற்குள் வலைத்தளம் முடக்கப்பட்டது. இரவு 10 மணிக்கும், அதைத்தொடர்ந்து,  11 மணிக்கும் புக்கிங் ஓபன் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது வரை வெப்சைட் இயங்கவில்லை.  மேலும், 19- ம் தேதி வரை படத்திற்கான டிக்கெட் திரையரங்குகளில் விற்பனை செய்யப்படாது எனவும் அறிவித்துள்ளனர். 

விஜய் ரசிகர்கள் தொடர்ந்து அலைக்கழிக்கப்படுவதாகவும், வேண்டுமென்றே வெப்சைட்டை முடக்கி வைத்துவிட்டு, மறைமுகமாக டிக்கெட் விற்பனை செய்கிறார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளதாகவும் ரசிகர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

ஆனால், டிக்கெட் கிடைத்து விட்டதாக பிரிண்ட் செய்யப்பட்ட டிக்கெட்டின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் சிலர் பதிவிட்டுள்ளது எப்படி எனவும் கேள்வி எழுப்பினர்.

இது தொடர்பாக திரையரங்க ஊழியர்களிடம் கேள்வி எழுப்பினால் உரிய பதிலளிக்க மறுப்பதாக ரசிகர்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும், கரூரில் திரையரங்குகளில் விற்பனை செய்யப்படும் தின்பண்டங்களுக்கு உரிய பில் கொடுப்பதில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இந்த பிரச்சனை தொடர்பாக திரையரங்க நிர்வாகி ஒருவரிடம் விளக்கம் கேட்டபோது செய்தியாளர்களுக்கு உரிய விளக்கம் அளிக்காமல், கோபம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com