அமித்ஷா வருகை : ஆத்திரமடைந்த பாஜகவினர்...! நடந்தது என்ன...?

அமித்ஷா வருகை :    ஆத்திரமடைந்த பாஜகவினர்...!  நடந்தது என்ன...?
Published on
Updated on
1 min read

மத்திய அமைச்சர் அமித் ஷா சென்னை விமான நிலையம் வந்த நேரத்தில் மின்தடை ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த பாஜக தொண்டர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தடைந்தார். இந்நிலையில், விமான நிலையத்தில் இருந்து வெளியேறும் பகுதிக்கு அமித் ஷா வந்த போது அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டது. மேலும் விமான நிலையத்திற்கு வெளியே சாலையில் நடந்து சென்று, தொண்டர்களின் வரவேற்பை ஏற்ற சமயத்தில் சாலை மின் விளக்குகள் அணைந்தன. இந்த மின்தடை சில நிமிடங்களுக்கு மேல் நீடித்ததால், அங்கு கூடியிருந்த பாஜக தொண்டர்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி சில நிமிடங்கள் பரபரப்பானது.

இதையடுத்து, அமித் ஷாவின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் வகையில் மின்தடை நிகழ்த்தப்பட்டதாக பாஜக தொண்டர்கள் குற்றம்சாட்டினர். இதனிடையே மின்தடைக்கு விளக்கம் அளித்துள்ள மின்வாரியம், "போரூர், பரங்கிமலை மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின்தடை ஏற்பட்டது" என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக,  நேற்றும் இது போன்ற சம்பவம் வேலூரில் நடைபெற்றது.  குடியாத்தம் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் அமைச்சர் அமித்ஷாவை வரவேற்று பாஜகவினர் பேனர்கள் வைத்த நிலையில், அனுமதியின்றி பேனர்கள் வைக்க வைக்கப்பட்டதாக கூறி நகராட்சி ஊழியர்கள் பேனர்களை அகற்றினர்.

 இதனையடுத்து  பாரதிய ஜனதா நிர்வாகிகள் 20 க்கும் மேற்பட்டோர்  நகராட்சி அலுவலகத்திற்கு சென்று நகராட்சி ஊழியர்களிடம் தங்களுக்கு தகவல் தெரிவிக்காமல் பேனர்களை அகற்றியது  ஏன் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் நகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது. பாஜகவினர் நகராட்சி அலுவலகத்தில் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ  சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வைரலாகியது. 

இவ்வாறிருக்க, இன்றும் அமித்ஷாவின் வருகையின்போது, இது போன்ற சம்பவம் நிகழ்ந்தது பாஜக நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. 

மேலும், இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை,

உள்துறை அமைச்சர் வரும்போது மின்தடை ஏற்பட்டது மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம் என கூறினார். மேலும் திமுக ஆட்சிக்கு வந்த பின், அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாக குற்றஞ்சாட்டிய அண்ணாமலை, அரசு இதை தீவிரமாக எடுத்துக் கொண்டு இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டுமென வலியுறுத்தினார். 

அதனை தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு என்ன செய்தது என்பது உள்பட முதலமைச்சரின் அனைத்து கேள்விகளுக்கும் இன்று பதிலளிப்போம் என தெரிவித்தார். மேலும் திமுக ஆட்சியில் இருப்பதை தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை என சாடிய அண்ணாமலை, 2024-ஆம் ஆண்டு மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களை முன்னதாகவே நடத்தவே மக்கள் விரும்புவதாகவும் கூறினார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com