ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு தாயின் மடியில் ஓய்வெடுக்கிறார் பூஜா கௌட் .......

ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு தாயின் மடியில் ஓய்வெடுக்கிறார் பூஜா கௌட் .......

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு அவரது இரு சகோதரர்கள் மற்றும் பெற்றோருடன் மும்பை புறநகர் பகுதியில் வசித்து வந்துள்ளார் பூஜா.  அன்றைய தினம் அவளது சகோதரனுடன் சண்டையிட்ட காரணத்தால் தாமதமாக தனியாக பள்ளியிலிருந்து கிளம்பியுள்ளாள். பள்ளிக்கு வெளியே ஐஸ் கிரீம் சாப்பிட்டு கொண்டிருந்த பூஜா டிசோசா தம்பதியினரால் கடத்தப்பட்டுள்ளார். 

டிசோசா தம்பதியினருக்கு குழந்தையில்லாத காரணத்தால் அவரை வளர்த்து வந்துள்ளனர்.  இந்நிலையில் ஓரிரு வருடங்களுக்கு பிறகு தம்பதியினருக்கு குழந்தை பிறந்த்துள்ளது.  குழந்தை பிறந்த பிறகு தொடர்ந்து துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார் பூஜா.  கூலியற்ற பணிபெண்ணாக மாற்றப்பட்டுள்ளாள் பூஜா.  

தொடர்ந்து பல ஆண்டுகள் தேடுதலுக்கு பிறகு முயற்சியை கைவிட்டுள்ளனர் பூஜா குடும்பத்தினர்.  தொடர் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதால் தான் கடத்தி வரப்பட்டதை வீட்டு பணிப்பெண்ணிடம் தெரிவித்துள்ளார் பூஜா.  இதனையடுத்து இணையத்தில் பெயரைக் குறிப்பிட்டு தேடும்போது காணவில்லை என்ற போஸ்டரில் ஒரு தொலைபேசி எண் கிடைத்துள்ளது.  அதனை தொடர்பு கொண்டு பேசியபோது அந்த நபர் டிசோசா குடும்பத்தில் பணிபுரியும் பெண்ணின் அண்டை வீட்டினர் என்பது தெரிய வந்துள்ளது.  இதன் பின்னர் பூஜாவும் அவரது தாயும் ரகசியமாக சந்திக்க வைக்கப்பட்டுள்ளனர்.  அவரது பிறப்பு அடையாளத்தை வைத்து பூஜாவை அவரது மகள் என உறுதிபடுத்தினார் பூஜாவின் தாய்.

தற்போது 16 வயதில் பூஜா மீட்கப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அச்சத்துடனே இருப்பதாக பூஜாவின் தாய் தெரிவித்துள்ளார்.

பூஜாவின் தந்தை சில வருடங்களுக்கு முன்பு புற்றுநோயால் மரணமடைந்துள்ளார்.  தந்தையை காண முடியாத வலியில் இருப்பதாக பூஜா கூறியுள்ளார்.  மேலும் அவருடைய தாயார் கூலி வேலை செய்வதாகவும் அவருக்கு உதவ விருப்பம் இருப்பதாகவும் பேசியுள்ளார் பூஜா.  தனக்கு படிக்க மிகவும் ஆசையாக இருப்பதாகவும் ஆனால் அவருடைய குடும்பம் வறுமையில் உள்ளதாகவும் வருத்தத்துடன் கூறியுள்ளார் பூஜா.

பூஜாவை அவரது உறவினர்கள் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்து சந்தித்து சென்ற வண்ணம் உள்ளனர்.