பொன்முடி மீதான மறு ஆய்வு வழக்கு ஒத்தி வைப்பு..!

பொன்முடி மீதான மறு ஆய்வு வழக்கு ஒத்தி வைப்பு..!
Published on
Updated on
1 min read

அமைச்சர்  பொன்முடிக்கு எதிரான மறு ஆய்வு வழக்கு விசாரணையை  சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக  தாமாக முன்வந்து மறு ஆய்வுக்கு எடுத்த வழக்கின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் அக்டோபர் 19 -ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது

கடந்த 1996 - 2001ம் ஆண்டுகளில் திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் ஒரு கோடியே 36 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக,  அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோருக்கு எதிராக 2002-ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

விழுப்புரம் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த வழக்கு வேலூருக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த வேலூர் நீதிமன்றம், குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்புக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து மறு ஆய்வு  வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, லஞ்ச ஒழிப்புத் துறை, பொன்முடி உள்ளிட்டோர் பதிலளிக்க  உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும்  பொன்முடி தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நிராகரித்தார்.   இந்த நிலையில்,  3 மாதங்களுக்கு ஒருமுறை சுழற்சி நடைமுறைப்படி, இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது பொன்முடி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ,  தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளதால், இந்த வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

இதனை ஏற்ற நீதிபதி, வழக்கின் விசாரணையை அக்டோபர் 19ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com