ஏரிகளில் கழிவுநீர் மற்றும் குப்பைகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், பண்ருட்டி எம்.எல்.ஏ. வேல்முருகன், சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பூண்டி, புழல், உள்ளிட்ட ஏரிகளை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள் குப்பைகளை ஏரிகளில் கொட்டுவதால், சுற்றுச்சூழல் கேடு ஏற்படுவதாகவும், தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் ஏரிகளைச் சுற்றி சுற்றுச்சுவர் கட்டப்படுமா கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, சென்னை மக்களுக்கு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 200 எம்.எல்.டி. குடிநீர் கூடுதலாக வழங்கப்பட்டு வருவதாகவும், ஏரிகள் அனைத்தும் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது என்றும், ஏரிகளில் கழிவு நீர் மற்றும் குப்பைகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் எனவும் கூறினார்.
மேலும், கழிவுநீர் எடுத்துச் செல்லும் லாரிகளுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளதோடு, லாரிகள் எங்கு செல்கிறது என்று கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.