நாடாளுமன்றம் 7 ஆம் நாளாக இன்றும் முடக்கம்...!

நாடாளுமன்றம் 7 ஆம் நாளாக இன்றும் முடக்கம்...!

அதானி விவகாரம், ராகுல்காந்தி பேச்சு தொடர்பான அமளியால் நாடாளுமன்றம் 7ம் நாளாக மீண்டும் முடங்கியது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 13ம் தேதி தொடங்கிய நிலையில், முதல் நாளில் இருந்தே லண்டனில் ராகுல்காந்தி பேசியது தொடர்பாக பாஜக அமைச்சர்கள் கேள்வியெழுப்பி வந்தனர். இந்தியாவில் ஜனநாயகம் கேள்விக்குறியாகி உள்ளதாகவும், பெகாசஸ் செயலியால் தனது செல்போனும் உளவு பார்க்கப்பட்டதாகவும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ராகுல்காந்தி முன்னதாக பேசினார். இந்நிலையில் அதானி விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகளை திசைதிருப்பவே ஆளுங்கட்சி அமளியில் ஈடுபட்டு வருவதாகவும், அதனால் தான் கூட்டத்தொடர் தொடர்ந்து ஒத்திவைக்கப்படுவதாகவும் எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. முதல் நாளில் இருந்து இதுதொடர்பான வாக்குவாதத்தால், இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் மக்களவை தொடங்கியவுடனேயே, அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தக்கோரி எதிர்கட்சிகள் அவைக்கு முன் சென்று கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து ஆளுங்கட்சியினரும் அமளியில் ஈடுபட்ட நிலையில், அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதையும் படிக்க : உகாதிக்கு வாழ்த்து சொன்ன முதலமைச்சர்...!

அதேபோல் மாநிலங்களவையிலும் ராகுல்காந்தி மற்றும் அதானி விவகாரம் தொடர்பாக எதிர்கட்சியினரும் ஆளுங்கட்சி எம்பிக்களும் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து மாநிலங்களவையும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்ட இரு அவைகளும், எதிர்கட்சிகளின் கூச்சல் குழப்பத்தால் நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் நாடாளுமன்றம் 7ம் நாளாக இன்றும் முடங்கியது குறிப்பிடத்தக்கது.