பிற மாநிலத்தவர்கள் குறித்த தகவல்கள் சேமிக்க உத்தரவு....!!!

பிற மாநிலத்தவர்கள் குறித்த தகவல்கள் சேமிக்க உத்தரவு....!!!
Published on
Updated on
2 min read

தமிழ்நாட்டில் வாழும் பிற மாநிலத்தவர் குறித்த விவரங்களை எடுக்க காவல்துறையினருக்கு டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.  அவர்கள் இருக்கும் பகுதியில் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர், அவர்கள் அடங்கிய வாட்ஸ் அப் குழுவை உருவாக்கவும் டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழ்நாட்டில் வாழும் வட மாநிலத்தவர்கள் குறித்த காவல்துறையின் ஆய்வு கூட்டம் காணொளி மூலமாக டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் நடத்தப்பட்டது.  இந்த கூட்டத்தில் ஏடிஜிபி சட்டம் ஒழுங்கு சங்கர், உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் மற்றும் ஐஜிக்கள் ,டிஐஜிக்கள், எஸ்பிக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.  

இந்த கூட்டத்தின் முடிவில் கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதனை காவல்துறையினர் பின்பற்றுமாறு டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

1. பிற மாநில தொழிலாளர்கள் பணிபுரியும் நிறுவனங்கள் குறித்தும், தொழிலாளர்களின் பெயர், வயது, பாலினம் மற்றும் அவர்களின் சொந்த ஊர் குறித்தும் தகவல்களை காவல்துறை சேகரிக்க வேண்டும்.

2. பிற மாநில தொழிலாளர்களுடன் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தி அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்.

3. பிற மாநில தொழிலாளர்களுடன் காவல் ஆய்வாளர் தொடர்பில் இருக்கும் வகையில் அவர்களில் ஒருவரை ஒருமுனை தொடர்பாளராக நியமிக்க வேண்டும். வெளி மாநில தொழிலாளர்களுக்கான உதவி மைய தொலைபேசி எண்ணை அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். மேலும் காவல் ஆய்வாளர்கள் ஒரு முனை தொடர்பாளராக நியமிக்கப்பட்ட தொழிலாளர்களை உள்ளடக்கிய வாட்ஸப் குழுவை உருவாக்க வேண்டும்.

4.பிற மாநில தொழிலாளர் வசிக்கும் இடங்களில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில் இரவு பகல் ரோந்து மேற்கொள்ள வேண்டும்.

5. பிற மாநில தொழிலாளர்கள் அதிக அளவில் வேலை செய்யும் மற்றும் தங்கி இருக்கும் இடங்களில் பட்டா புத்தகங்கள் வைத்து அவ்வப்போது தணிக்கை செய்யப்பட வேண்டும். சிறிய குழுக்களாக அல்லது குடும்பமாக வசிக்கும் பிற மாநிலத் தொழிலாளர்களை சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் சந்தித்து ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால் அழைக்கும் வகையில் தங்களது அலைபேசி எண்ணை பகிர்ந்து கொள்ள வேண்டும்.

6 மதுபான கடைகள் அருகே பிரச்சினைகள் ஏதும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

7. காவல் ஆய்வாளர்கள் பிற மாநில தொழிலாளர்களிடம் போலியாக சித்தரித்து வீடியோக்களை வெளியிடக் கூடாது என்று அறிவுறுத்த வேண்டும்.

8. வெளி மாநில தொழிலாளர்களிடமிருந்து புகார்கள் ஏதேனும் காவல் நிலையத்தில் பெறப்பட்டால் அது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

9.பிற மாநிலத் தொழிலாளர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தால் அதன் காரணங்கள் குறித்து விசாரித்து
உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

உள்ளூர் ஊடக மற்றும் பத்திரிகையாளர்களிடம் வெளிமாநில தொழிலாளர்கள் குறித்து ஏதேனும் செய்தி வெளியிடும் முன்னர் அதன் உண்மைத் தன்மையை உறுதி செய்து கொண்டு வெளியிடும்படி கேட்டுக் கொள்ள வேண்டும்.

11. சமூக ஊடகங்களில் ஹிந்தியில் பரப்பப்படும் போலி வீடியோக்கள் மற்றும் தகவல்களைத் தொடர்ந்து கண்காணித்து சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் தெளிவுபடுத்தி உடனடியாக செய்தி வெளியிட வேண்டும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com