காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ஜே.எம்.ஹாரூனின் வாரிசுகளுக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட சுற்றுச்சுவரை இடிக்க சென்னை மாநகராட்சிக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ஜே.எம்.ஹாரூனின் வாரிசுகளான வேளச்சேரி எம்.எல்.ஏ. அசன் மவுலானா உள்ளிட்ட அவரது சகோதர, சகோதரிகளுக்கு சொந்தமாக எருக்கஞ்சேரியில் 18 ஆயிரத்து 207 சதுர அடி நிலம் உள்ளது. அந்த நிலத்தை சுற்றி கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவர் , அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக கூறி, அதனை இடிப்பதற்காக கடந்த 4ம் தேதி மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த நோட்டீசுக்கு தடை விதிக்க கோரி, அசன் மவுலானா உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
மனு நீதிபதிகள் அனிதா சுமந்த், நிர்மல் குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மூத்த வழக்கறிஞர் ஏ.கே. ஸ்ரீராம் ஆஜராகி, 29 ஆண்டுகளாக இந்த நிலம் தங்களுக்கு சொந்தமாக இருந்த நிலையில், மூன்றாவது நபரின் தூண்டுதலின் பேரில் சற்றுச்சுவரை இடிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், நோட்டீஸ் அனுப்பும் முன் தங்கள் தரப்பிடம் விளக்கமும் கேட்கப்படவில்லை எனவும் நிலத்தை அளவிட சென்ற போது தங்கள் தரப்பு ஆட்கள் யாரையும் உடன் அழைத்து செல்லவில்லை எனவும் வாதிட்டார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மாநகராட்சியின் நோட்டீசுக்கு தடை விதித்து வழக்கு விசாரணையை ஜூன் 9ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
இதையும் படிக்க: மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளும் மாற்றம்...!!