ஈபிஎஸ் வழியில் ஓபிஎஸ்...ஸ்டாலினுக்கு நெருக்கடி...!

ஈபிஎஸ் வழியில் ஓபிஎஸ்...ஸ்டாலினுக்கு நெருக்கடி...!
Published on
Updated on
2 min read

அரசுப் பணிகளை தனியார்மயமாக்கி சமூக நீதியை குழிதோண்டிப் புதைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் திமுக அரசை கண்டித்து ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

திமுக அரசின் தேர்தல் அறிக்கை:

கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது, திமுக அரசு வேலை வாய்ப்புகள் தொடர்பாக சில வாக்குறுதிகளை தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

  • வேலை வாய்ப்பு அலுவலகங்கள் இளைஞர்களின் திறன் பயிற்சி மையங்களாக செயல்படும்.
  • ஐந்து ஆண்டுகளில் 50 லட்சம் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்.
  • அரசுத் துறைகள், கல்வி நிலையங்களில் காலியாக உள்ள 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்.
  • புதிதாக 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அறிக்கையில் வெளியிட்டு இருந்தது.

தமிழக அரசின் அரசாணை 115:

அதன்படி, அரசு வேலை வாய்ப்புகள் தொடர்பான அரசாணையை 115 ன் தமிழக அரசு இயற்றியுள்ளது. அதில் தமிழக அரசுப் பணிகளுக்கான ஆட் தேர்வு மற்றும் பயிற்சிகளில் மாற்றங்களை செய்தல், நிரந்தர பணியாளர்களை நியமிக்காமல் தனியார் நிறுவனங்களிடமிருந்து குத்தகை முறையில் பணியாளர்களை பெறுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை அந்த அரசாணையின் கீழ் தமிழக அரசு கொண்டுவந்துள்ளது.

எதிர்ப்பு தெரிவிக்கும் எதிர்க்கட்சிகள்:

ஆனால், இந்த அரசாணை மூலம் இளைஞர்களின் அரசு வேலை என்பது கேள்விக்குறியாகி உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி  வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாடு அரசின் அரசாணை 115 -க்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

”உள்ளத்தில் நஞ்சும், உதட்டில் வெல்லமும்”:

ஓபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில், “ஒவ்வொரு ஆண்டும் பத்து இலட்சம் வேலைவாய்ப்புகள் என்ற முறையில் ஐந்தாண்டுகளில் ஐம்பது இலட்சம் வேலைவாய்ப்புகள் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாக்குறுதியை அளித்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த திமுக, இன்று இருக்கின்ற அரசுப் பணிகளை எப்படி வெளிமுகமை மூலம் மேற்கொள்ளலாம் என்பது குறித்து ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைத்து ஆணை பிறப்பித்திருப்பதைப் பார்க்கும்போது ”உள்ளத்தில் நஞ்சும், உதட்டில் வெல்லமும்” என்ற பழமொழிதான் நினைவுக்கு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

ஒப்பந்த முறையில் பணியமர்த்துதல்:

தொடர்ந்து, மனித வளம் தொடர்பான சீர்திருத்தங்கள் என்று நிதிநிலை அறிக்கையில் சொல்லிவிட்டு, அதற்கு செயல்வடிவம் கொடுக்கும் விதமாக மனிதவள மேலாண்மைத்துறை மூலம் 18.10.2022 அன்று  அரசாணை எண் 115 வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த ஆணையில் குழுவின் ஆய்வு வரம்புகளாக பன்முக வேலைத் திறனோடு பணியாளர்களின் ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வு அமைதல், அரசின் பல்வேறு நிலைப் பணியிடங்கள், பதவிகள், பணிகள் ஆகியவற்றை திறன் அடிப்படையில் ஒப்பந்த முறையில் நிரப்புவதற்கான முறைகளை மேற்கொள்ளுதல், ‘டி’ மற்றும் ‘சி’ பிரிவு பணியிடங்களை வெளிமுகமை மூலம் நிரப்புதல், பணியாளர்களை ஒப்பந்த முறையில் நியமித்து குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அவர்களின் பணிச் செயல்பாடுகள் ஆய்வு செய்து அவர்களை காலமுறை ஊதியத்தில் அமர்த்துதல் போன்றவை சேர்க்கப்பட்டுள்ளன.

சமூகநீதிக்கு மூடுவிழா நடத்த தயாராகிய திமுக அரசு:

இந்தக் குழுவின் ஆய்வு வரம்புகளை பார்க்கும்போது அரசு இயந்திரங்களை தனியாரிடம் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டு சமூகநீதிக்கு மூடுவிழா நடத்த திமுக அரசு தயாராகிவிட்டது தெரிகிறது. ஒருபுறம் அரசுப் பணிகளை தனியாருக்கு தாரை வார்க்கும் வகையில், சமூகநீதிக்கு எதிராக ஒரு குழுவை அமைத்துவிட்டு, மறுபுறம் அரசுப் பணிகளின் அனைத்து நிலைகளிலும் சமூகநீதிக் கொள்கைகளை செயல்படுத்த சட்ட வல்லுநர் குழுவை அமித்திருப்பது முன்னுக்குப் பின் முரணான செயல், இது திமுக அரசின் இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டு காட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்,

“திராவிட மாடல்” என்று சொல்லிக் கொள்வது வெட்கக்கேடானது:

திமுக அரசின் இந்த நடவடிக்கை அரசுப் பணிகளில் சேர வேண்டும் என்ற ஆர்வமுடைய ஏழையெளிய, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் கனவை சிதைப்பது போல் அமைந்துள்ளது. மனித வள மேலாண்மைத் துறை என்று பெயரிட்டுவிட்டு, மனித வளத்தை சிறுமைப்படுத்தும் பணியில் ஈடுபடுவது ஒரு அரசுக்கு அழகு இல்லை என்றும், மக்கள் விரோத நடவடிக்கைகளை எல்லாம் எடுத்துவிட்டு அதை “திராவிட மாடல்” என்று சொல்லிக் கொள்வது வெட்கக்கேடானது என்றும் விமர்சித்து பேசியுள்ளார்.

அரசாணை எண் 115 ஐ உடனடியாக திரும்பப் பெற வேண்டும்:

எனவே, தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டபடி மூன்றரை இலட்சம் காலிப் பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட இதர அமைப்புகள் மூலம் உடனடியாக நிரப்புவதற்கும், புதிதாக இரண்டு இலட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், 18.10.2022 நாளிட்ட மனிதவள மேலாணமைத் துறை அரசாணை எண் 115 ஐ உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென்றும்  ஓபிஎஸ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பின்னணியில், தமிழக அரசு செயல்படுத்திய அரசாணை 115 ஐ திரும்பப் பெற கோரி நேற்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்திய நிலையில், இன்று ஓபிஎஸ்சும் அரசாணை 115 ஐ திரும்பப் பெற கோரி வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அடுத்தடுத்த நெருக்கடியாக  அரசியல் அரங்கில் பேசப்படுகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com